மேட்டூர் கிழக்கு கரை கால்வாய் தண்ணீர் இல்லாமல் வறண்டது

மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு கரை கால்வாயில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதால் தேவூர் கிழக்கு கரை கால்வாய் பாசன பகுதி விவசாயிகள் சாகுபடி செய்த பயிர்கள் வாடி வருகிறது. கால்வாயும் வறண்டு காணப்படுகிறது. கல்வடங்கம் ஆற்றில் மூழ்கி இருந்த சிலைகள் வெளியே தெரிகிறது.;

Update:2018-02-07 04:30 IST
சேலம்,

சேலம் மாவட்டம் மேட்டூர் கிழக்கு கரை கால்வாயில் திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் தேவூர் பகுதியில் பொன்னம்பாளையம், குள்ளம்பட்டி, கல்லம்பாளையம், அம்மாபாளையம், கத்தேரி, ஒக்கிலிப்பட்டி, வட்ராம்பாளையம், சென்றாயனூர், சுண்ணாம்பு கரட்டூர் உள்பட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் சாகுபடி வசதி பெறுகின்றனர். இந்த கால்வாயில் திறந்து விடப்படும் தண்ணீரை பயன்படுத்தி விவசாயிகள் நெல், கரும்பு, சோளம், நிலக்கடலை, மஞ்சள், கேழ்வரகு, மக்காச்சோளம் மற்றும் காய்கறி வகைகளை பயிரிடுகின்றனர்.

இந்த ஆண்டு மேட்டூர் கிழக்கு கரை கால்வாயில் 3 கட்டமாக தண்ணீர் திறந்து விடப்பட்டு நிறுத்தப்பட்டது. இதனால் கால்வாய் வறண்டு காணப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கால்வாயில் தண்ணீர் நிறுத்தப்பட்டதால் கால்வாயை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் போதிய தண்ணீரின்றி வாடி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதற்கிடையே தேவூர் அருகே கல்வடங்கம் காவிரி ஆற்றில் தண்ணீர் வற்றியுள்ளதால் தண்ணீரில் மூழ்கி இருந்த சாமி சிலைகள், உரல், அம்மி, ஆட்டுக்கல் உள்ளிட்டவை வெளியே தெரிகின்றன.

தேவூர், அரசிராமணி, செட்டிப்பட்டி, மோட்டூர், எடப்பாடி, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் சாமி சிலைகள் வடிவமைக்கும் சிற்பிகள், மண்பாண்டம் வடிவமைப்பாளர்கள், கற்களில் சாமி சிலை செதுக்குவோர், அம்மிக்கல், உரல், ஆட்டுக்கல் உள்ளிட்ட கற்களில் வீட்டு உபயோக பொருட்கள் தயாரிப்போர் வடிவமைப்பில் சரியாக வராத பொருட்களை கல்வடங்கம் காவிரி ஆற்றில் விட்டு செல்வதை வழக்கமாக கொண்டு உள்ளனர்.

இவ்வாறு சிற்பிகள் வடிவமைப்பில் சரிவர அமையாத சாமி சிலைகளை அதிகளவில் கல்வடங்கம் காவிரி ஆற்று தண்ணீரில் போட்டு சென்றுள்ளனர். அப்படி விடப்பட்ட சாமி சிலைகள் இதுவரை தண்ணீரில் மூழ்கி கிடந்தது. தற்போது கல்வடங்கம் காவிரி ஆற்றில் தண்ணீர் வற்றியுள்ளதால் தண்ணீரில் மூழ்கி இருந்த விநாயகர் சிலைகள், முருகன் சிலை, முனியப்பன் சிலை, நாகர் சிலை, மற்றும் ஆட்டுக்கல், அம்மிக்கல் உள்ளிட்டவை வெளியே தெரிகின்றன. பொதுமக்கள் அந்த சிலைகளை எடுத்துச் செல்கின்றனர்.

மேலும் செய்திகள்