திருப்பரங்குன்றம் அருகே காட்டுப்பகுதியில் செயல்படும் போலீஸ் நிலையம்

திருப்பரங்குன்றம் அருகே போக்குவரத்து வசதி இல்லாத காட்டுப்பகுதியில் போலீஸ் நிலையம் செயல்படுகிறது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

Update: 2018-02-06 22:00 GMT
திருப்பரங்குன்றம்,

மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்து உள்ளது ஆஸ்டின்பட்டி கிராமம். இங்கு குடியிருப்புகளே இல்லாத பரந்து, விரிந்த காட்டுப் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை புறக்காவல் நிலையம் ஒரு சிறிய கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது.

பழம்பெரும் குற்றவாளிகளிடம் ரகசிய விசாரணை நடத்துவதற்காகவும், ஆஸ்டின்பட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் நோயாளிகளாக சிகிச்சை பெறக்கூடிய குற்றவாளிகளை கண்காணிப்பதற்காகவும் அந்த புறக்காவல் நிலையம் செயல்பட்டு வந்தது. காலப்போக்கில் அதே கட்டிடத்தில் தனி போலீஸ் நிலையமாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதற்கு முன்பு திருநகர் போலீஸ் நிலைய கட்டுப்பாட்டில் இருந்து வந்த விளாச்சேரி, தனக்கன்குளம், தோப்பூர், கூத்தியார்குண்டு, நிலையூர், சூரக்குளம், வேடர்புளியங்குளம், சாக்கிலிப்பட்டி, தென்பழஞ்சி ஆகிய 9 கிராமங்களும், திருமங்கலம் நகர் போலீஸ் நிலையத்தோடு இருந்து வந்த கப்பலூர், உச்சப்பட்டி ஆகிய கிராமங்களும் ஆஸ்டின்பட்டி போலீஸ் நிலையத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த போலீஸ் நிலையத்திற்கு சென்று வருவதற்கு போக்குவரத்து வசதி என்பது குதிரைக் கொம்பாக உள்ளது. ஆஸ்டின்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் இருந்து போலீஸ் நிலையத்திற்கு சென்று வருவதற்கு சரியான பாதை வசதி கூட கிடையாது. ஒத்தையடியாக உள்ள அந்த பாதையிலும் மின் விளக்கு வசதி இல்லை.

ஆகவே இரவு நேரங்களில் மட்டுமல்லாது, பகலிலும் விஷப் பூச்சிகள் நடமாட்டம் உள்ளது.

இதனால் பாதசாரிகளும், வாகனத்தில் செல்பவர்களும் மட்டுமல்லாது போலீசாரும் பயம் கலந்த பீதியிலேயே பாதுகாப்பு இல்லாத நிலையில் போலீஸ் நிலையத்துக்கு சென்று வரக் கூடிய அவல நிலை உள்ளது.

இதை எல்லாம் கடந்து போலீஸ் நிலையத்தை அடைந்த போதிலும் மின் தடை ஏற்பட்டால் போலீஸ் நிலையமே இருளில் மூழ்கும் அவலமும் இருக்கத் தான் செய்கிறது. இதோடு காட்டுப் பகுதியாக இருப்பதால் பல மணி நேரம் கொசுத்தொல்லை தொடர்கிறது. பொதுமக்கள் மற்றும் போலீசாரின் பாதுகாப்புக்காக குடியிருப்பு பகுதிகள் நிறைந்த இடத்துக்கு அந்த போலீஸ் நிலையத்தை மாற்றிட வேண்டும் என்ற பரவலாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

எனவே காட்டுக்குள் இருந்து போலீஸ் நிலையத்தை மீட்க வேண்டும், அதற்கு அரசும், உயர் அதிகாரிகளும் போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்