கள்ளத்துப்பாக்கி விற்பனை செய்ய முயன்ற வழக்கில் மேலும் 3 பேர் கைது

கள்ளத்துப்பாக்கி விற்பனை செய்ய முயன்ற வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதுவரை கைதான 6 பேரையும் காவலில் வைத்து விசாரிக்க போலீசாருக்கு கோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளது.

Update: 2018-02-06 22:15 GMT
திருச்சி,

அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து தமிழகத்திற்கு வந்த ஒரு கும்பல் கள்ளத்துப்பாக்கிகளை கடத்தி வந்திருப்பதாக உளவுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் கடந்த மாதம் 27-ந்தேதி திருச்சியில் உள்ள ஒரு ஓட்டலில் போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த ஓட்டலில் தங்கி இருந்த சென்னையை சேர்ந்த போலீஸ்காரர் பரமேஸ்வரன், அவருடைய உறவினர் நாகராஜன், பட்டுக்கோட்டையை சேர்ந்த சிவா ஆகிய 3 பேர் சிக்கினர். அவர்களிடம் இருந்து உரிமம் இல்லாத 2 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து சென்னைக்கு கொண்டு சென்றனர். அங்கு இந்த வழக்கு தொடர்பாக மேலும் சிலரை சென்னை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றம் செய்யப்பட்டது. திருச்சி சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய தீவிர புலன் விசாரணையில் இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேர் நெல்லையில் தலைமறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த கலைசேகர், வி.கே.புதூரை சேர்ந்த எட்டப்பன் மற்றும் சென்னை புழலை சேர்ந்த திவ்ய பிரபாகரன் ஆகிய 3 பேரை திருச்சி சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். திருச்சி போலீசாரால் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட 6 பேரையும் நேற்று திருச்சி ஜுடிசியல் மாஜிஸ்திரேட் எண்-6 கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவர்களை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்தனர்.

அப்போது அரசு உதவி வழக்கறிஞர் செல்வராஜ் போலீசார் சார்பாக ஆஜர் ஆகி, இந்த வழக்கு நாட்டின் பாதுகாப்பு தொடர்பான மிக முக்கியமான வழக்கு என்பதால் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி பல தகவல்களை பெற வேண்டியது இருப்பதால் 8 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும், என்று வாதாடினார்.

இதனை ஏற்று போலீஸ்காரர் பரமேஸ்வரன், நாகராஜ், சிவா, திவ்ய பிரபாகரன் ஆகிய 4 பேரையும் 2 நாள் காவலில் வைத்து விசாரிக்கவும், எட்டப்பன், கலைசேகர் ஆகியோரை 8 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கியும் மாஜிஸ்திரேட் ஷகிலா உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அவர்களை போலீசார் ரகசிய இடத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்