ஆந்திர போலீசாரால் மருத்துவ மாணவர் கைது: கலெக்டரிடம் தாயார் மனு

எனது மகனுக்கு செம்மரக்கடத்தல் கும்பலுடன் எவ்வித தொடர்பும் கிடையாது. அவரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவ மாணவனின் தாய் வேலூர் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டிடம் மனு அளித்தார்.

Update: 2018-02-06 22:30 GMT
வேலூர்,

திருப்பதி கரகம்பாடி சாலையில் செம்மரக்கட்டை கடத்தியதாக கடந்த 4-ந் தேதி ஆந்திர செம்மரக்கடத்தல் தடுப்பு அதிரடிப்படை போலீசார் வேலூர் தோட்டப்பாளையத்தை சேர்ந்த அஜித் குமார்(வயது 24) உள்பட 2 பேரை கைது செய்தனர். மருத்துவ பட்டய படிப்பு மாணவரான அஜித்குமார் மீது செம்மரக்கட்டை கடத்தல்காரர்களுக்கு டிரைவராக இருந்து உதவியது தொடர்பாக 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில் அவரது தாயார் வேலூர் தோட்டப்பாளையத்தை சேர்ந்த அமுலு, நேற்று தனது உறவினர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்களுடன் வந்து வேலூர் கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டிடம் தனித்தனியாக மனு அளித்தார்.

விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

அதில், எனது மகன் அஜித்குமார் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரியில் விழி ஒளி பரிசோதனை மையத்தில் பட்டய படிப்பு படித்து வருகிறான். அவனுக்கு தந்தை கிடையாது. நான் வீட்டு வேலை செய்து வருகிறேன். எனவே அஜித் குமார் தனது படிப்பிற்காக பகுதி நேரத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தான். கடந்த ஞாயிற்றுக்கிழமை பகுதிநேர டிரைவராக வேலைக்கு சென்ற எனது மகனை செம்மரக்கட்டை கடத்தியதாக ஆந்திர போலீசார் பிடித்து வைத்துள்ளனர்.

திருப்பதிக்கு அரிசி, காய்கறி கொண்டு செல்வதாக கூறி எனது மகனை டிரைவராக அழைத்து சென்றுள்ளனர். எனது மகனுக்கும், செம்மரக்கடத்தல் கும்பலுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. அவனை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் ராமன் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு பகலவன் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள்.

மேலும் செய்திகள்