கலசபாக்கம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு

அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவர் போலீஸ் பாதுகாப்புடன் படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் தரிசனம் செய்தார்.

Update: 2018-02-06 22:30 GMT
கண்ணமங்கலம்,

போளூரை சேர்ந்த வசந்தம்மணி என்பவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட பிரச்சினையில் கலசபாக்கம் தொகுதி பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ.வை (அ.தி.மு.க.) தாக்கினார். இந்த வழக்கில் கைதான வசந்தம்மணி வேலூர் சிறையில் இருந்தபோது திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி வசந்தம்மணி இறந்து விட்டார்.

இது தொடர்பான வழக்கில் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. மீதான புகார் காரணமாக அவருக்கு தமிழக அரசு உத்தரவுப்படி, மாவட்ட காவல் துறை சார்பில் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் அவர் கண்ணமங்கலம் அருகே உள்ள படவேடு ரேணுகாம்பாள் கோவில் மற்றும் லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு நேற்று காலை வந்தார். அங்கு அவர் 2 கோவிலிலும் சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் கோவில் அதிகாரிகளிடம் கோவிலில் இயற்கை இடர்பாடுகளை தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டார். அப்போது பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. கூறுகையில், “கோவிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக தனது தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் ரூ.10 லட்சம் ஒதுக்கி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி விரைவில் செய்து தரப்படும்” என்றார்.

அவருடன் போளூர் ஒன்றிய ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு முன்னாள் தலைவர் மனோகரன், முன்னாள் கவுன்சிலர் துரை, ஒன்றிய குழு முன்னாள் துணை தலைவர் ரகு உள்பட பலர் வந்திருந்தனர்.

முன்னதாக பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. ஏரிக்குப்பம் கிராமத்தில் உள்ள யந்திர சனீஸ்வர பகவான் கோவிலுக்கும் சென்று, அங்கு எள்தீபம் ஏற்றி சாமி தரிசனம் செய்தார்.

மேலும் செய்திகள்