கூடலூரில் பிரிவு–17 நிலத்தில் கட்டிடங்களை இடிக்க எதிர்ப்பு அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்

கூடலூரில் பிரிவு–17 நிலத்தில் கட்டிய கட்டிடங்களை இடிக்க வருவாய் துறையினர் முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-02-06 22:30 GMT
நீலகிரி

நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டமன்ற தொகுதியில் முடிவு செய்யப்படாத பிரிவு–17 வகை நிலம் சுமார் 80 ஆயிரம் ஏக்கர் உள்ளது. இந்த நிலத்தில் அடிப்படை வளர்ச்சி மற்றும் கட்டுமான பணிகள் மேற்கொள்ள சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது. இந்த நிலையில் பிரிவு–17 வகை நிலத்தில் கட்டுமான பணிகள் நாளுக்குநாள் அதிகரித்து வருவதாக வருவாய் துறைக்கு பல்வேறு புகார்கள் வந்தன.

இதைத்தொடர்ந்து கூடலூர் ஆர்.டி.ஓ. முருகையன், தாசில்தார் அப்துல் ரகுமான், வருவாய் ஆய்வாளர் சதீஷ், கிராம நிர்வாக அலுவலர் மோசஸ் உள்ளிட்ட வருவாய் துறையினர் கூடலூர் நகர பகுதியில் பிரிவு–17 வகை நிலத்தில் புதியதாக கட்டப்பட்ட கட்டிடங்களை இடித்து அகற்றும் பணியை நேற்று பகல் 12 மணிக்கு தொடங்கினர்.

மேலும் பாதுகாப்பு கருதி போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிசங்கர் தலைமையில் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் உள்ளிட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். கூடலூர் நந்தட்டி பகுதியில் பிரிவு–17 நிலத்தில் இருந்த கட்டுமான பொருட்கள் விற்பனை கடையை அகற்றுவதற்காக பொக்லைன் எந்திரங்கள் வரவழைக்கப்பட்டன. இதை பார்த்த அந்த பகுதி மக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கடையை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் அதிகாரிகளிடம் பொதுமக்கள் பேசினர். இறுதியாக மாலை 5 மணிக்குள் புதிய கட்டுமான பணிகளை அகற்றி விடுவதாக உறுதி அளித்தனர். இதை ஏற்று அதிகாரிகள், போலீசார் அங்கிருந்து சென்றனர். இதை தொடர்ந்து கூடலூர் அத்திப்பாளி பகுதியில் பிரிவு–17 நிலத்தில் சுமார் ரூ.50 லட்சம் செலவில் கட்டப்பட்ட அடுக்குமாடி கட்டிடங்களை பொக்லைன் எந்திரங்கள் கொண்டு இடிக்கும் பணியை வருவாய் துறையினர் தொடங்கினர்.

இதை அறிந்த தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள், பொதுமக்கள் அங்கு திரண்டு வந்து ஆர்.டி.ஓ., தாசில்தாரை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த நேரத்தில் போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிசங்கர் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அப்போது போலீசார் அவர்களை கலைந்து செல்லுமாறு எச்சரித்தனர். ஆனால் கட்டிடங்களை இடிக்க மாட்டோம் என உறுதி அளித்தால் மட்டுமே கலைந்து செல்வோம் என்று கூறி இல்லை எனில் அனைவரையும் கொன்று விட்டு கட்டிடங்களை இடியுங்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அதிகாரிகள், போலீசாரால் கட்டிடங்களை இடிக்க முடிய வில்லை. இதனால் பொதுமக்கள் கூட்டம் நேரத்துக்கு நேரம் அதிகமாகி கொண்டே இருந்தது. மேலும் கூடலூர்– மண்வயல் செல்லும் சாலையிலும் வாகன நெருக்கடி ஏற்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் அந்த சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதித்தனர். மேலும் வாகனங்கள் வேறு வழியாக திருப்பி விடப்பட்டது

இதனிடையே பிரிவு–17 நிலத்தில் கட்டிடங்கள் கட்டிய உரிமையாளர் தரப்பில் வக்கீல் கோஷிபேபி நேரில் வந்து வருவாய் துறையினர் கூறும்போது, போலீசாரிடம் எந்த உத்தரவின் அடிப்படையில் கட்டிடங்களை இடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் பிரிவு–17 நிலத்தில் கட்டப்பட்ட கட்டிடங்களை இடிக்கலாம் என நீதிமன்ற உத்தரவு உள்ளதா? அடுக்குமாடி கட்டிடங்கள் கட்ட தொடங்கும் போது தடுக்காமல் அதிகாரிகள் வேடிக்கை பார்த்த உள்நோக்கம் என்ன? என்றார். மேலும், கட்டிடங்களை இடிக்க நீதிமன்றத்தில் தடை ஆணை பெறப்பட உள்ளது. அதுவரையில் அதிகாரிகள் மேல் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றார். இன்று (நேற்று) மாலை 3 மணிக்கு கூடலூர் நீதிமன்றத்தில் தடையாணை பெற உள்ளது. இதனால் இடிக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என வக்கீல் கோஷிபேபி அதிகாரிகளிடம் கேட்டு கொண்டார்.

இதேபோல் சம்பவ இடத்துக்கு கூடலூர் எம்.எல்.ஏ. திராவிடமணி நேரில் வந்து அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த நிலையில் சம்பந்தப்பட்ட கட்டிட உரிமையாளர் தரப்பில் கூடலூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் தடையாணை பெறப்பட்டது. வழக்கு விசாரணை முடியும் வரை இருதரப்பினரும் எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என கோர்ட்டு உத்தரவிட்டது. இதனால் மாலை 6 மணி வரை காத்து இருந்த அதிகாரிகள் கட்டிடங்களை இடிக்காமல் அங்கிருந்து திரும்பி சென்றனர்.

இது குறித்து கட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கூறும்போது, பிரிவு–17 நிலத்தில் கட்டிடங்கள் கட்டுவதற்கு கதவு எண்கள், மின்சாரம் என சம்பந்தப்பட்ட துறையால் வழங்கப்படுகிறது. பல மாதங்களுக்கு முன்பு பொக்லைன் எந்திரங்கள் மூலம் மண் அள்ளப்பட்டு நிலம் சமப்படுத்தப்பட்டது. அதன்பின்னர் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டது. கட்டிடங்கள் கட்டும் பணியை தொடங்கும்போது அதிகாரிகள் தடுக்க வில்லை. உள்நோக்கத்துடன் செயல்பட்டு விட்டு இப்போது கட்டிடங்களை இடிக்க நடவடிக்கை எடுப்பதை கண்டிக்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர். இந்த சம்பவங்களால் கூடலூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்