கயத்தாறு பகுதிகளில் ஓடும் காட்டாறுகளில் புதிய தடுப்பணைகள் கட்ட கலெக்டர் ஆய்வு

கயத்தாறு பகுதிகளில் ஓடும் காட்டாறுகளில் புதிய தடுப்பணைகள் கட்ட மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2018-02-06 21:30 GMT
கயத்தாறு,

கயத்தாறு பகுதிகளில் ஓடும் காட்டாறுகளில் புதிய தடுப்பணைகள் கட்ட மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் ஆய்வு மேற்கொண்டார்.

கலெக்டர் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகா பகுதிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து கிராமங்களும் வானம் பார்த்த பூமியாக இருக்கின்றன. இதனால் இந்த பகுதிகளுக்கு நிரந்தரமாக நீர் ஆதாரம் கிடையாது. கோடை காலங்களில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும். இதனை சரிசெய்வதற்காக, சங்கரன்கோவில் பகுதியில் இருந்து வரும் உப்பாறு உள்ளிட்ட பல்வேறு காட்டாறுகளில் கயத்தாறு பகுதிகளில் தடுப்பணைகள் கட்டி, மழை காலங்களில் தண்ணீரை சேமிப்பது குறித்து மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் நேற்று ஆய்வு செய்தார்.

அதிகாரிகளுக்கு உத்தரவு

முன்னதாக கயத்தாறு யூனியன் அலுவலகத்துக்கு வந்த அவர், வட்டார வளர்ச்சி ஆணையாளர்கள் நாகராஜன், தங்கவேல், பொறியாளர்கள் நேரு, வெள்ளப்பாண்டியன், மேரி, அலெக்ஸ் மற்றும் தாசில்தார் முருகானந்தம் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது கயத்தாறு நாற்கர சாலை அருகே வடக்கு இலந்தைகுளம் உப்பாற்றில் தடுப்பு அணை கட்டுவதற்காக அதனை பார்வையிட்டு அறிக்கை தாக்கல் செய்ய, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

குடிநீர் திட்ட பணிகள்

அதன் பின்னர், இலவேலங்கால், சீவலப்பேரி, காமநாயக்கன்பட்டி, செவல்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் சீவலப்பேரி கூட்டு குடிநீர் திட்ட பணிகளை கலெக்டர் பார்வையிட்டார். அப்போது மழை காலங்களில் தண்ணீரை சேமித்து வைப்பதற்கு கயத்தாறு பகுதிகளில் தடுப்பணைகள் கட்ட இடங்கள் தேர்வு செய்யவும், இருக்கும் குளங்களை சீரமைக்கவும் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்