பட்டைநாமம் அட்டையுடன் வியாபாரிகள் நூதன ஆர்ப்பாட்டம் சில்லறை வணிகத்தில் 100 சதவீதம் அந்நிய முதலீட்டை நீக்க வலியுறுத்தல்

தமிழ்நாடு வணிகர் சங்கங்கங்களின் பேரமைப்பு சார்பில் வியாபாரிகள் பட்டை நாமம் அட்டையுடன் நேற்று காலை நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2018-02-06 21:00 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடியில், சில்லறை வணிகத்தில் 100 சதவீதம் அந்நிய நேரடி முதலீட்டை நீக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்கங்கங்களின் பேரமைப்பு சார்பில் வியாபாரிகள் பட்டை நாமம் அட்டையுடன் நேற்று காலை நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மத்திய மாவட்ட தலைவர் சோலையப்பராஜா வரவேற்று பேசினார். வடக்கு மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம், தெற்கு மாவட்ட தலைவர் காமராஜ், செயலாளர் செல்வம், மத்திய மாவட்ட செயலாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில துணைத்தலைவர்கள் ராஜா, வெற்றிராஜன், தசரதபாண்டியன், மாநில இணை செயலாளர்கள் பொன்ராஜ், வெங்கடேசுவரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கோரிக்கைகள்

ஆர்ப்பாட்டத்தில் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி, அறநிலையத்துறை கடை வாடகையை முறைப்படுத்த வேண்டும். உணவகங்கள், கடைகளின் சேகரமாகும் குப்பைகளை மறுசுழற்சி செய்வதில் விலக்கு அளிக்க வேண்டும். 50 மைக்ரானுக்கு மேல் உள்ள பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டுக்கு அபராதம் விதிக்க கூடாது. சில்லறை வணிகத்தில் 100 சதவீதம் அந்நிய நேரடி முதலீட்டை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் பட்டை நாமம் வரைந்த அட்டையை கழுத்தில் மாட்டியபடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கலந்து கொண்டவர்கள்

ஆர்ப்பாட்டத்தில் பெருவணிகர்கள் தெய்வநாயகம், சந்திரசேகர், ஜேம்ஸ்அண்ணாமலை, தங்கத்துரை மற்றும் தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர், விளாத்திகுளம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் திரளாக கலந்து கொண்டனர். மத்திய மாவட்ட பொருளாளர் சோலைஜெயராஜ் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்