ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தேவையற்றது சீமான் பேட்டி

பாராளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தேவையற்றது என்று சீமான் கூறினார்.

Update: 2018-02-05 22:51 GMT
நெல்லை,

நெல்லையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க.வில் வலுவான தலைமை இல்லாததால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கருத்தை தெரிவிக்கிறார்கள். மத்திய பட்ஜெட்டை முதல்-அமைச்சர் வரவேற்கிறார். ஆனால், பாராளுமன்ற துணை சபாநாயகராக இருக்கக் கூடிய தம்பிதுரை உள்ளிட்டவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

பா.ஜனதா அரசின் பட்ஜெட் அறிக்கையில் கூறப்பட்டவற்றை ஓராண்டுக்குள் நிறைவேற்ற முடியாது. வருகிற பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டே பட்ஜெட் தயார் செய்யப்பட்டு உள்ளது.

பாராளுமன்றத்துக்கும், சட்டசபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது என்பது தேவையற்றது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் செலவு மிச்சப்படுத்தலாம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒவ்வொரு மாநிலத்துக்கும் தேர்தல் நடத்துவதற்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. அதில்தான் தேர்தல் நடத்த வேண்டும்.

தமிழகத்தில் ‘நீட்‘ தேர்வு என்பது அவசியமற்றது. இந்த தேர்வின் மூலம் கல்வி தரத்தை எப்படி உயர்த்த முடியும்? ‘நீட்‘ தேர்வில் தேர்ச்சி பெற்ற பேராசிரியர்களா பாடம் நடத்துகிறார்கள்? ஏற்கனவே உள்ள பேராசிரியர்கள் தானே பாடம் நடத்துகிறார்கள்.

வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க முடியாது. தற்போது தமிழக அரசு, பா.ஜனதா கட்சியின் கைப்பாவையாக இருக்கிறது. ஜெயலலிதா காலத்தில் எதிர்க்கப்பட்ட திட்டங்கள் தற்போது நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அ.தி.மு.க. எம்.பி.க்களின் ஆதரவு மத்திய அரசுக்கு தேவைப்படுகிறது. அதனால் மத்தியில் பா.ஜனதா ஆட்சி இருக்கும் வரை தமிழகத்தில் அ.தி.மு.க. அரசு நீடிக்கும்.

ஒருவேளை 18 எம்.எல்.ஏ.க்கள் பதவி நீக்கம் தொடர்பாக தி.மு.க. தொடர்ந்த வழக்கில் அ.தி.மு.க.வுக்கு எதிராக தீர்ப்பு வந்தால், முன்கூட்டியே தேர்தல் வரலாம். அதுவும் மேல்முறையீடு என்று மேலும் 6 மாதம் தாமதம் ஆகும்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் திரையுலக புகழை வைத்து ஆட்சிக்கு வரலாம் என்ற எண்ணம் அடித்து நொறுக்கப்படும். அவர்களின் முதல்-அமைச்சர் கனவு தமிழகத்தில் பலிக்காது.

மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் தன்னாட்சி முறைதான் இருக்க வேண்டும். ஒவ்வொரு மாநிலத்தை சேர்ந்த தலைவர்கள் கலந்து பேசி மத்தியில் யார் பிரதமராக இருக்க வேண்டும் என்பதை சுழற்சி முறையில் முடிவு செய்ய வேண்டும்.

அப்போது நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு, தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் சிவகுமார் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

நெல்லை பாளையங்கோட்டை ஜவகர் திடலில் கடந்த 2009-ம் ஆண்டு நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் சீமான் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை நெல்லை முதலாவது ஜூடீசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது மாஜிஸ்திரேட்டு ராம்தாஸ் முன்னிலையில் சீமான் ஆஜரானார். பின்னர் இந்த வழக்கு விசாரணையை மாஜிஸ்திரேட்டு அடுத்த மாதம் (மார்ச்) 12-ந் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்