ரூ.289 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும்

நெல்லையில் 2-வது கட்டமாக ரூ.289 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.;

Update: 2018-02-05 22:46 GMT
நெல்லை,

நெல்லை மாநகராட்சியில் புதிதாக அமைக்கப்பட்ட பூங்கா திறப்பு விழா நேற்று நடந்தது. கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி பூங்காவை திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து 66 பேர்களுக்கு பல்வேறு ஆணைகளையும், மாநகராட்சியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற 4 பேருக்கு ரூ.16 லட்சத்து 60 ஆயிரத்து 632-க்கான ஓய்வூதிய பணப்பலன்களையும் வழங்கி பேசினார்.

நெல்லை மாநகராட்சி சென்ற ஆண்டு மாநிலத்தில் சிறந்த மாநகராட்சி என்று தமிழக அரசு விருது பெற்றது. மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் ஒத்துழைப்பும் அவர்களுடைய சேவையும் இந்த விருதை வாங்கித்தந்தது. இதுபோன்று வரும் ஆண்டுகளிலும் நாம் விருதினை வாங்குவதோடு வரிசைப் பட்டியலிலும் முதலிடத்தில் வருவதற்கு மாநகராட்சி அலுவலர்கள் உழைக்க வேண்டும்.

நெல்லை மாநகராட்சியில் டெங்கு விழிப்புணர்வு, டெங்கு ஒழிப்பு பணியில் மாநகராட்சி பணியாளர்களின் பணி முக்கிய பங்களிப்பாக இருந்தது. அவர்களின் முயற்சியால் சமீப காலங்களில் டெங்கு பாதிப்பு இல்லை என்ற நிலை வந்துள்ளது.

நெல்லை மாநகராட்சி மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க முக்கூடல் அருகே உள்ள அரியநாயகிபுரத்தில் இருந்து தாமிரபரணி ஆற்றில் குடிநீர் திட்டம் ரூ.230 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் ஒரு வருடத்தில் முடிவடையும். அதை போல நகர்ப்புற உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் நிதி சேவை நிறுவனம் மூலம் ஜெர்மன் வங்கி மானிய நிதி உதவியுடன் 45 இடங்களில் பூங்கா அமைப்பதற்கு ரூ.75 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பூங்கா அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

நெல்லை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் 2-வது கட்டமாக செயல்படுத்துவதற்கு ரூ.289 கோடியே 1 லட்சம் மதிப்பில் நிறைவேற்றுவதற்கு ஒப்பந்தப்புள்ளி பெறப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வார்டு 1 முதல் 7 மற்றும் 39 முதல் 55 வார்டு பகுதியில் செயல்பட உள்ளது. விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்துவதற்காக 3-வது கட்ட பாதாள சாக்கடை திட்டம் ரூ.381 கோடியே 86 லட்சம் மதிப்பில் நிறைவேற்ற திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது.

ஸ்மார்ட் சிட்டியாக நெல்லை மாநகராட்சிக்கு ரூ.1217 கோடியே 55 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்துவதற்கு கலந்தாலோசகருக்காக ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. இத்தகைய திட்டங்கள் நிறைவடையும் போது நெல்லை மாநகராட்சி சிறந்த மாநகராட்சியாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டு சிறந்த மாநகராட்சியாக எப்போதும் இருப்பதற்கு நீங்கள் ஒத்துழைக்க வேண்டும்.

இந்த நிகழ்ச்சியில் நெல்லை, தச்சநல்லுார், பாளையங்கோட்டை, மேலப்பாளையம் மண்டலங்களில் 73 பேர்களுக்கு கட்டிட வரைபட அனுமதி ஆணை, புதிய குடிநீர் குழாய் இணைப்பு ஆணை, சொத்துவரி பெயர் மாற்று ஆணை, பிறப்பு சான்றுக்கான ஆணையினை கலெக்டர் வழங்கினார்.

விழாவில் மாநகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) நாராயணன் நாயர், மாநகர சுகாதார அலுவலர் டாக்டர் பொற்செல்வன், உதவி ஆணையர்கள் கீதா, சுப்புலட்சுமி, கவிதா, பாஸ்கர், உதவி செயற்பொறியாளர்கள் சாந்தி, கருப்பசாமி, செய்தி மக்கள் தொடர்புத்துறை துணை இயக்குனர் கண்ணதாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்