கோவிலில் அபயாம்பிகை அம்மனுக்கு சுடிதார் அலங்காரம்; 2 அர்ச்சகர்கள் பணியிடை நீக்கம்

மயிலாடுதுறை மயூரநாதர் கோவிலில் அபயாம்பிகை அம்மனுக்கு சுடிதார் அலங்காரம் செய்த 2 அர்ச்சகர்களை திருவாவடுதுறை ஆதீனம் பணியிடை நீக்கம் செய்து உள்ளார்.

Update: 2018-02-05 23:15 GMT
மயிலாடுதுறை,

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான மயூரநாதர் கோவில் உள்ளது. இங்கு 18 சித்தர்களில் ஒருவரான குதம்பை சித்தர் ஜீவசமாதி உள்ளது. இந்த கோவிலில் உள்ள அபயாம்பிகை அம்மன் வராகி பீடத்தில் நின்ற கோலத்தில் பாலாம்பிகை அம்மன் வடிவத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

இந்த அம்மனுக்கு தைமாத வெள்ளிக் கிழமையையொட்டி சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த 2-ந் தேதி தை மாத 3-வது வெள்ளிக்கிழமையையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.

அப்போது அர்ச்சகர்கள், அபயாம்பிகை அம்மனுக்கு சந்தன காப்பில் சுடிதார் அலங்காரம் செய்து இருந்தனர். இதனை கண்ட பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். குறிப்பாக பெண் பக்தர்கள் அம்மனை இந்த தோற்றத்தில் பார்த்து வேதனை அடைந்தனர்.

அம்மனுக்கு சுடிதார் அலங்காரம் செய்திருந்ததை கோவிலுக்கு வந்த பெண்கள் தங்களது செல்போனில் படம் பிடித்து வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற சமூக வலை தலங்களிலும் வெளியிட்டனர். இந்த படக்காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவாவடுதுறை ஆதீனம் குருமகா சன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டார்.

ஆகம விதிமுறைகளை மீறி செயல்பட்டதாலும், மயூரநாதர் கோவில் தேவஸ்தான அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்காமலும், அபயாம்பிகை அம்மனுக்கு சுடிதார் அலங்காரம் செய்த மயிலாடுதுறையை சேர்ந்த அர்ச்சகர்கள் கல்யாணசுந்தரம்(வயது 75), அவரது மகன் ராஜு(45) ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்தார்.இந்த தகவலை மயூரநாதர் கோவில் கண்காணிப்பாளர் குருமூர்த்தி தெரிவித்தார். 

மேலும் செய்திகள்