திருச்சியில் இருந்து சேலத்துக்கு சிறப்பு ரெயில் இயக்கம்: அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு

திருச்சியில் இருந்து சேலத்துக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரெயிலுக்கு நாமக்கல், மோகனூரில் அ.தி.மு.க.வினர் வரவேற்பு அளித்தனர்.

Update: 2018-02-05 23:00 GMT
நாமக்கல்,

சேலத்தில் இருந்து திருச்சிக்கு நாமக்கல் வழியாக பயணிகள் ரெயில் இயக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இதை பரிசீலித்த சேலம் ரெயில்வே கோட்டம் திருச்சி - கரூர் பயணிகள் ரெயிலை சேலம் வரை நீட்டித்து உத்தரவிட்டு உள்ளது. இந்த ரெயில் நேற்று முதல் சோதனை முறையில் 3 மாதங்களுக்கு இயக்கப்பட உள்ளது. பயணிகளின் கூட்டத்தை பொறுத்து தொடர்ந்து இயக்கப்பட இருப்பதாக அதிகாரிகள் கூறினர். நேற்று திருச்சியில் இருந்து இயக்கப்பட்ட புதிய சிறப்பு ரெயில் மதியம் 12.40 மணிக்கு நாமக்கல் வந்தது. இந்த ரெயிலுக்கு பி.ஆர்.சுந்தரம் எம்.பி. தலைமையிலும், எம்.எல்.ஏ.க்கள் கே.பி.பி.பாஸ்கர், சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலையிலும் அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதில் நாமக்கல் நகராட்சி என்ஜினீயர் கமலநாதன், நாமக்கல் நகர கூட்டுறவு வங்கி தலைவர் காளியப்பன், முன்னாள் நகராட்சி துணைத்தலைவர் சேகர் மற்றும் முன்னாள் நகராட்சி கவுன்சிலர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த சிறப்பு ரெயில் தினசரி திருச்சியில் காலை 9.35 மணிக்கு புறப்பட்டு கரூருக்கு 11.35 மணிக்கு வந்து சேருகிறது. பின்னர் அங்கிருந்து 11.40 மணிக்கு புறப்பட்டு, பகல் 1.20 மணிக்கு சேலம் சென்று சேரும். அதேபோல சேலம் - கரூர் சிறப்பு பயணிகள் ரெயில், சேலத்தில் இருந்து 1.30 மணிக்கு புறப்பட்டு, 3.20 மணிக்கு கரூர் செல்கிறது. பின்னர் அங்கிருந்து 3.30 மணிக்கு புறப்பட்டு மாலை 5.35 மணிக்கு திருச்சி சென்றடைகிறது என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல இந்த ரெயிலுக்கு நாமக்கல் மாவட்ட நுழைவு வாயிலான மோகனூர் ரெயில் நிலையத்திலும் மோகனூர் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் கருமண்ணன் தலைமையில் வரவேற்பு கொடுத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மோகனூர் பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் புரட்சிபாலு, நகர துணைச் செயலாளர் சிவஞானம், பொருளாளர் தாவீது, முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் முருகேசன், கூட்டுறவு கடன் சங்க இயக்குனர் கார்த்தி, மாவட்ட மாணவர் அணி செயலாளர் சந்தர்மோகன், கூட்டுறவு கடன் சங்க தலைவர்கள் ராமச்சந்திரன் (தோளூர் அணியாபுரம்), நல்லுசாமி (குமரிபாளையம்) மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்