ஊழல் புகாரில் சிக்கிய துணை வேந்தரை தகுதி நீக்கம் செய்யாதது ஏன்? டாக்டர் ராமதாஸ் கேள்வி

காஞ்சீபுரத்தில் நடந்த பா.ம.க. பொதுக் குழுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

Update: 2018-02-05 23:00 GMT
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரத்தில் நடந்த பா.ம.க. பொதுக் குழுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், ஊழல் புகாரில் சிக்கிய துணைவேந்தர் கணபதியை ஏன் தகுதி நீக்கமோ, பணி இடைநீக்கமோ செய்யவில்லை? என்று கேள்வி எழுப்பினார்.

காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட பா.ம.க. சார்பில் காஞ்சீபுரத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட துணைத்தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்துகொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக அரசின் மீது பா.ம.க. கூறிய ஊழல் புகார்கள் தற்போது உண்மையாகி வருகிறது. தமிழக அரசின் 25 துறைகள் மீது தமிழக கவர்னரிடம் பா.ம.க. ஊழல் புகார் தெரிவித்துள்ளது. அதன்மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி கூறப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுப்பதாக கவர்னர் தெரிவித்துள்ளார்.

பா.ம.க. வழங்கிய தமிழக அரசின் ஊழல் பட்டியல் மீது நடவடிக்கை எடுக்கும்படி நேரிலோ அல்லது கடிதம் மூலமோ மீண்டும் தமிழக கவர்னருக்கு நினைவுபடுத்தப்படும்.

ஊழல் புகாரில் சிக்கிய கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதியை ஏன் தகுதிநீக்கமோ, பணி இடைநீக்கமோ செய்யவில்லை?. துணை வேந்தர் கணபதிக்கும், தமிழக தற்போதைய மற்றும் முன்னாள் அமைச்சர்களுக்கும் தொடர்பு உள்ளது. அதனால்தான் நடவடிக்கை எடுக்கவில்லையா?

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்