கர்நாடக சட்டசபை: ‘காவிரியில் உரிமையை நிலைநாட்ட அரசு உறுதி’

முதல் நாளான நேற்று இரு சபைகளின் கூட்டு கூட்டத்தில் கவர்னர் வஜூபாய்வாலா உரை நிகழ்த்தினார். கவர்னர் பேசுகையில், “காவிரியில் கர்நாடகத்தின் உரிமையை நிலைநாட்ட அரசு உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்தார்.

Update: 2018-02-06 00:00 GMT
பெங்களூரு,

கர்நாடக சட்டசபையின் கூட்டு கூட்டத்தொடர் பிப்ரவரி 5-ந் தேதி (அதாவது நேற்று) தொடங்கப்படும் என்று அரசு ஏற்கனவே அறிவித்தது.

அதன்படி சட்டசபையின் கூட்டத்தொடர் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று தொடங்கியது. இது நடப்பு ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஆகும். நேற்று காலை மணிக்கு சட்டசபை கூடியது. சட்ட சபையின் கூட்டு கூட்டத்தில் கவர்னர் வஜூபாய் வாலா கலந்து கொண்டு உரையாற்றினார்.

சரியாக காலை 11 மணிக்கு அவர் உரையை தொடங்கினார். முன்னதாக விதான சவுதாவுக்கு வந்த கவர்னரை முதல்-மந்திரி சித்தராமையா, மேல்-சபை தலைவர் சங்கரமூர்த்தி, சபாநாயகர் கே.பி.கோலிவாட், சட்டத்துறை மந்திரி ஜெயச்சந்திரா உள்ளிட்டோர் வரவேற்று சட்டசபை கூட்ட அரங்கத்திற்குள் அழைத்து வந்தனர். சபாநாயகர் இருக்கையில் கவர்னர் அமர்ந்தார். அவரது இருபுறமும் மேல்-சபை தலைவர் மற்றும் சபாநாயகர் அமர்ந்திருந்தனர். இந்த கூட்டத்தில் கவர்னர் வஜூபாய் வாலா பேசியதாவது:-

கர்நாடகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் சமூக நீதியை நிலைநாட்டியது, பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தியது, சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்களின் நலனுக்காக திட்டங்களை அமல்படுத்தியதில் எனது அரசு குறிப்பிடத்தக்க சாதனையை நிகழ்த்தியுள்ளது. மத நல்லிணக்கம், சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட தேவையான நடவடிக்கை எடுக்கப்பட் டது. மதக்கலவரங்களை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காவிரி, கிருஷ்ணா நதிகளில் கர்நாடகத்தின் உரிமையை நிலைநாட்ட அரசு உறுதி பூண்டுள்ளது. மகதாயி நதியிலும் கர்நாடகத்தின் பங்கை பெற தேவையான நடவடிக்கையை எனது அரசு எடுத்து வருகிறது. போலீஸ் துறையை நவீனப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நவீனப்படுத்துதல் திட்டத்தின் கீழ் 84 போலீஸ் நிலையங்கள், 2 மாவட்ட போலீஸ் அலுவலக கட்டிடங்கள், 232 குடியிருப்பு கட்டிடங்கள், 6 மாவட்ட போலீஸ் பயிற்சி மையங்கள், 10 புறக்காவல் நிலைய கட்டிடங்கள் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

அவசர காலங்களில் 100 எண்ணுக்கு அழைக்கும் வசதி மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போலீஸ் ரோந்து பணியும் அதிகப்படுத்தப்பட்டு உள்ளது. மாநிலத்தில் உள்ள 760 போலீஸ் நிலையங்களை மக்களின் தோழனாக மாற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

2013-ம் ஆண்டு முதல் போலீஸ் துறையில் 29 ஆயிரத்து 684 காவலர்கள், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள், இதர பணியாளர்கள் நேரடி நியமனம் மூலம் நியமிக்கப்பட்டனர். 11 ஆயிரம் காவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவது, சிறைகளில் காணொலி காட்சி வசதிகளை ஏற்படுத்தும் பணிகள் செய்யப்பட்டுள்ளன. தீயணைப்புத்துறையில் 1,989 பணி இடங்களும், சிறைத்துறையில் 1,995 இடங்களும் புதியதாக உருவாக்கப்பட்டு உள்ளது.

பொது சேவைகளில் ஊழலை ஒழிக்க எனது அரசு தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மின்னணு ஆளுமை திட்டத்தில் அரசின் சேவைகளில் வெளிப்படைத்தன்மை அதிகமாகியுள்ளது. ஊழல் வழக்குகளை சிறப்பான முறையில் கையாள ஊழல் ஒழிப்பு படை உருவாக்கப்பட்டு உள்ளது. இதனால் 65 சோதனைகள் நடத்தப்பட்டு 278 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 404 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஊழல் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. ஊழல் ஒழிப்பு படை பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்டங்கள், தாலுகாக்கள், கிராமங்கள் அளவில் கலை நிகழ்ச்சிகள் அடிக்கடி நடத்தப்படுகின்றன.

மண்டல ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்ய ஐதராபாத்- கர்நாடக பகுதியில் எனது அரசு வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதாவது அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்யப்பட்டு, அதற்குரிய பலனை அந்த பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அரசு பணியில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 18 ஆயிரத்து 993 பணி இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. அந்த பகுதியின் வளர்ச்சிக்கு ரூ.3,750 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வறட்சி இல்லாத கர்நாடகத்தை உருவாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. விவசாய குளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் இதுவரை 1.90 லட்சம் மழைநீர் சேகரிப்பு குளங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. இதன் மூலம் பயிர் விளைச்சல் 50 சதவீதம் அதிகரித்துள்ளது. ரூ.8,891 கோடியில் 2 ஆயிரத்து 672 ஏரிகளில் தண்ணீர் நிரப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயரும். அத்துடன் வறட்சி பாதித்த மக்களுக்கு குடிநீர் வசதியும் கிடைக்கும்.

மேலும் எத்தினஒலே திட்டத்தின் கீழ் 527 ஏரிகளிலும், பத்ரா மேல் அணை திட்டத்தில் 367 ஏரிகளிலும் தண்ணீர் நிரப்பப்படும். விவசாய உபகரணங்களுக்கு எனது அரசு ரூ.1,654 கோடி ஒதுக்கியது. இதன் மூலம் 335 விவசாய உபகரண வாடகை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வானிலை அடிப்படையிலான பயிர் காப்பீட்டு திட்டம் அமல்படுத்தப்பட்டு 10.46 லட்சம் விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர். இதில் 6.25 லட்சம் விவசாயிகள் இழப்பீடாக ரூ.1,005 கோடியை பெற்றனர். பூஜ்ஜிய வட்டியில் 23.45 லட்சம் விவசாயிகளுக்கு கூட்டு வங்கிகள் மூலமாக ரூ.11 ஆயிரத்து 902 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கவர்னர் பேசினார்.

மேலும் செய்திகள்