புதுவையில் காங்கிரஸ் அல்லாத ஆட்சி அமைய அ.தி.மு.க. துணைநிற்கும், அன்பழகன் எம்.எல்.ஏ. உறுதி

புதுச்சேரியில் நிச்சயம் ஆட்சி மாற்றம் வரும். காங்கிரஸ் அல்லாத ஆட்சி அமைய அ.தி.மு.க. துணை நிற்கும் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.

Update: 2018-02-05 22:45 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி சட்டமன்ற அ.தி.மு.க. தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ., நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுச்சேரியில் கடந்த 18 மாத காலமாக கவர்னர் மற்றும் முதல்-அமைச்சர் இடையிலான அதிகார போட்டியால் மத்திய அரசின் பட்ஜெட்டில் புதுவைக்கு கூடுதல் நிதி ஒதுக்கவில்லை. கடந்த ஆண்டு ரூ.1,411 கோடி ஒதுக்கியதில் 5 சதவீதத்தை மட்டுமே ஒதுக்கி ரூ.1,476 கோடியை இந்த ஆண்டு ஒதுக்கியுள்ளது. புதுச்சேரி முதல்-அமைச்சரும், கவர்னரும் 100 தடவைக்கும் மேல் டெல்லிக்கு சென்றபோதிலும் கூடுதல் நிதி பெற்றுவரவில்லை.

கடந்த 2015-16ம் ஆண்டில் முன்னாள் முதல்-அமைச்சர் ரங்கசாமி 2015-16ம் ஆண்டில் மத்திய அரசு இயற்கை பேரிடர் நலநிதி ரூ.340 கோடி ஒதுக்கியதில், ரூ.188 கோடியை பெற்றார். ஆனால் மீதியுள்ள ரூ.152 கோடியை இதுவரை முதல்-அமைச்சர் நாராயணசாமி பெற்றுவரவில்லை. கவர்னரும் அதற்கு முயற்சிக்கவில்லை. புதுச்சேரி மத்திய அரசின் ஊக்குவிப்பு திட்டங்களில் புறக்கணிக்கப்பட்டு வருவதற்கு முதல்-அமைச்சர் நாராயணசாமியின் செயலற்ற தன்மையும் ஒரு காரணம். சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் நான் கூறும் குற்றச்சாட்டுக்கள் குறித்து என்னுடன் விவாதிக்க முதல்-அமைச்சர் நாராயணசாமி தயாரா?

புதுச்சேரியில் நிதி நெருக்கடி வந்துள்ளதைப்போல் முதல்-அமைச்சர் பதவிக்கும் நெருக்கடி வந்துள்ளது. அதனால் ஏற்பட்ட பயத்தின் காரணமாக முதல்- அமைச்சர் நாராயணசாமி கவர்னரிடம் முழுமையாக சரண் அடைந்துள்ளார். சட்ட விரோதமாக முதல்-அமைச்சர், அமைச்சர்கள் செயல்படுகின்றனர் என்று கவர்னர் புகார் கூறியுள்ளார்.

அதுபோல் கவர்னர் பதவிக்கு தகுதியில்லாதவர், அவர் ஊருக்குள் வந்தால் விரட்டி அடிக்க வேண்டும், மறியல் செய்ய வேண்டும் என்றெல்லாம் முதல்-அமைச்சர் நாராயணசாமி, கவர்னர் மீது புகார் கூறினார். மேலும் ஜனாதிபதியிடம் புகார் கொடுக்க இருப்பதாகவும் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் இருவரும் தற்போது கைகோர்த்து கொண்டுள்ளனர். இதன் மூலம் கவர்னருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கூட்டிய கூட்டத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சிகளை அவமானப்படுத்தி உள்ளார். இதை அந்த கட்சிகள் உணர வேண்டும்.

என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் மிக்சி, கிரைண்டர் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளது என கூறுவதற்கே முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு 19 மாதங்கள் தேவைப்பட்டுள்ளது. கடந்த என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் பி.ஆர்.டி.சி. ஊழல், பாப்ஸ்கோ ஊழல், ரோடியர் மில் ஊழல் உள்ளிட்ட பல ஊழல் குற்றச்சாட்டுகளை அ.தி.மு.க கூறியுள்ளது. ஆனால் அவைகள் மீது சிறு நடவடிக்கை கூட எடுக்கவில்லை. மிக்சி, கிரைண்டர் கொடுத்ததில் எப்படி ஊழல் நடந்துள்ளது என்பதை முதல்-அமைச்சர் தெளிவு படுத்த வேண்டும்.

தேர்தல் அறிக்கையில் அனைத்து குடும்பத்தினருக்கும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை, அனைவருக்கும் வாஷிங் மெஷின், முதியோர் ஓய்வூதியம் ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்படும், 30 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என்று அறிவித்த எதையும் செய்யவில்லை. அதேசமயம் அறிவிக்காத குப்பை வரி போடப்பட்டு, வீட்டு வரி, மின்சார கட்டணம், குடிநீர் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த 2015-16-ம் ஆண்டு முதல் 1லட்சத்து 44 ஆயிரம் பேருக்கு முதியோர், விதவை உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதில் இருந்து ஒரே ஒரு எண்ணிக்கையைக்கூட உயர்த்தி வழங்கவில்லை. கவர்னரும், ரங்கசாமியும் கை கோர்த்ததால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிடுமோ என்ற பயத்தால் முதல்-அமைச்சர், கவர்னருடன் கைகோர்த்து கொண்டுள்ளார்.

அரசு நினைத்தபடி ஒரு துறையில் இருக்கும் பணத்தை எடுத்து வேறு துறையில் மாற்றிப்போட்டு செலவு செய்ய முடியவில்லை என்ற விஷயத்தில்தான் முதல்-அமைச்சருக்கும், கவர்னருக்கும் மோதல் ஏற்பட்டது. புதுச்சேரியில் நிச்சயம் ஆட்சி மாற்றம் வரும். காங்கிரஸ் அல்லாத ஆட்சி அமைய அ.தி.மு.க. துணை நிற்கும். இந்த அரசு மற்றும் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லாததால் கவர்னர் மீது அ.தி.மு.க. கொடுத்த உரிமை மீறல் குழு புகாரை கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டி திரும்ப பெறுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்