முதலியார்பேட்டையில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த 4 பேர் கைது மேலும் ஒருவருக்கு போலீஸ் வலைவீச்சு

புதுவை முதலியார்பேட்டையில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்

Update: 2018-02-05 21:45 GMT
புதுச்சேரி,

புதுவை முதலியார்பேட்டையில் ஒரு வீட்டில் 3 நம்பர் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக முதலியார்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜன், தமிழரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

போலீசாரை கண்டதும் அங்கு இருந்த 3 வாலிபர்களும் தப்பி ஓட முயற்சி செய்தனர். உடனே போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்கள் 3 நம்பர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தது தெரியவந்தது. பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் முதலியார்பேட்டை பகுதியை சேர்ந்த செல்வராஜ் (வயது 40), சரவணன்(41) சிவா(54) என்பதும் அவர்கள் உருளையன்பேட்டையை சேர்ந்த ராஜாராம் என்பவரிடமிருந்து இருந்து லாட்டரி சீட்டுகளை வாங்கி விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து ராஜாராம் என்பவரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

அப்போது அவர், கேரளாவில் இருந்து லாட்டரி சீட்டுகளை வாங்கி விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து போலீசார் செல்வராஜ் உள்பட 4 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து அவர்களிடமிருந்து 6 செல்போன்கள், லாட்டரி சீட்டுகள் மற்றும் ஆயிரம் ரூபாயையும் பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கில் தேங்காய்த்திட்டு பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்