குப்பை கிடங்கில் தீ வைப்பதால் கடும் புகை மூட்டம்; குன்னூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

குப்பை கிடங்கில் தீ வைப்பதால் கடும் புகை மூட்டம் காரணமாக மூச்சு திணறல் ஏற்படுவதாக கூறி குன்னூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2018-02-05 21:30 GMT
குன்னூர்,

குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் ஓட்டுப்பட்டறையில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. அங்கு குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு இயற்கை உரம் தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இருப்பினும் குப்பைகள் அதிகளவில் இங்கு கொட்டப்படுவதால் ஊழியர்கள் குப்பைகளை எரித்து விடுகிறார்கள்.

இதனால் ஏற்படும் புகை மூட்டத்தால் வசம்பள்ளம், வள்ளுவர்நகர், வாசுகி நகர், வசந்தம் நகர் ஆகிய குடியிருப்பு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். குப்பைகளை எரிப்பதால் ஏற்படும் புகை மூட்டத்தால் மேற்கண்ட கிராம மக்கள் மூச்சுதிணறல், இருமல், தோல் நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.

இதுகுறித்து நகராட்சி அலுவலகத்தில் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் வசம்பள்ளத்தை சேர்ந்த கமலின் என்பவரின் 2 வயது குழந்தை டேனிக்கு 2 நாட்களுக்கு முன்பு மூச்சு திணறல் ஏற்பட்டு குன்னூர் தனியார் ஆஸ்பத்தரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான். இதையடுத்து நேற்று காலை மீண்டும் ஓட்டுப்பட்டறை கிடங்கில் குப்பைகளை எரித்ததால் கடும் புகை மூட்டம் ஏற்பட்டு மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டனர்.

இதை தொடர்ந்து அந்த பகுதி பொதுமக்கள் சுமார் 100 பேர் குழந்தைகளுடன் குன்னூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் பொதுமக்களை ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் ஆர்.டி.ஓ., ஊட்டி கலெக்டர் அலுவலகம் சென்று விட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குன்னூர் தாசில்தார் சிவக்குமாரை சந்தித்து மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட தாசில்தார், இதுபற்றி விசாரணை நடத்தி ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

அதன் பின்னர் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்