‘பேஸ்புக்’கில் பழகிய பெண்ணை பார்க்க சென்ற வாலிபரை தாக்கி நகை, பணம் கொள்ளை 3 பேர் கைது

‘பேஸ்புக்’கில் பழகிய பெண்ணை பார்க்க சென்ற வாலிபரை தாக்கி ரூ.6 லட்சம் நகை, பணத்தை கொள்ளையடித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-02-04 22:00 GMT
மும்பை,

‘பேஸ்புக்’கில் பழகிய பெண்ணை பார்க்க சென்ற வாலிபரை தாக்கி ரூ.6 லட்சம் நகை, பணத்தை கொள்ளையடித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

வாலிபரை தாக்கி கொள்ளை

மும்பையை சேர்ந்த 29 வயது வாலிபருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் ‘பேஸ்புக்’கில் மைனர் பெண் அறிமுகமானார். இதில், அந்த மைனர் பெண் தன்னை பார்க்க கோவண்டி பகுதிக்கு வருமாறு வாலிபரிடம் கூறினார். இதையடுத்து வாலிபர் சம்பவத்தன்று அந்த பெண்ணை பார்க்க கோவண்டிக்கு சென்றார். அப்போது அங்கு நின்ற மைனர் பெண் ஒருவர் வாலிபரை பார்த்து கையசைத்தார்.

வாலிபர் அந்த பெண் தான் தன்னிடம் ‘பேஸ்புக்’கில் பழகிய பெண் என நினைத்தார். எனவே அவர் அந்த மைனர் பெண்ணிடம் பேசச்சென்றார். அப்போது அங்கு வந்த 6 பேர் இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் வாலிபரை பயங்கரமாக தாக்கினர்.

பின்னர் அவர்கள் வாலிபரிடம் இருந்த பணம், நகை, விலை உயர்ந்த செல்போன் என ரூ.6 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்துவிட்டு தப்பிச்சென்றனர்.

3 பேர் கைது

இது குறித்து வாலிபர் போலீசில் புகார் அளித்தார். இது குறித்த புகாரின்பேரில் போலீசார் வாலிபரை தாக்கி பணம் பறித்ததாக தேவ்னார் பகுதியை சேர்ந்த சுபேர், செரிப்சேக் மற்றும் கோவண்டியை சேர்ந்த சல்மான் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் 3 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.

இந்த சம்பவத்தில் மைனர் பெண்ணிற்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்