அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கி தருவதாகக்கூறி, ரூ.3 லட்சம் மோசடி ஒருவர் கைது

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கி தருவதாகக்கூறி ரூ.3 லட்சத்து 25 ஆயிரம் வாங்கி மோசடி செய்த ஒருவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து உள்ளனர்.;

Update: 2018-02-04 22:15 GMT
புதுக்கோட்டை,

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 48). இவரது மகளும், புதுக்கோட்டை ஜீவா நகரைச் சேர்ந்த பால்ராஜ் மனைவி உஷாராணியின் மகளும் தோழிகள். இதனால் ரவிச்சந்திரனுக்கு தனது மகள் மூலம் உஷாராணி அறிமுகமானார். இதைத்தொடர்ந்து உஷாராணி தனக்கு தெரிந்த இலுப்பூர் அருகே உள்ள சாங்கிரான்பட்டியை சேர்ந்த குமாரசாமியின் மூலம் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கி தருவதாகவும், அதற்கு நீங்கள் பணம் தர வேண்டும் எனவும் கூறி உள்ளார். இதை நம்பிய ரவிச்சந்திரன் கடந்த 2015-ம் ஆண்டு ரூ.3 லட்சத்து 25 ஆயிரத்தை உஷாராணி, குமாரசாமி ஆகியோரிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

பணம் பெற்று மோசடி

பணத்தை பெற்றுக்கொண்ட உஷாராணி, குமரசாமி ஆகியோர் 3 ஆண்டுகள் ஆகியும் ரவிச்சந்திரனுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதைத்தொடர்ந்து உஷாராணி, குமாரசாமி ஆகியோரிடம் கொடுத்த பணத்தை ரவிச்சந்திரன் திருப்பி கேட்டு உள்ளார். ஆனால் அவர்கள் பணத்தை திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்து உள்ளனர்.

இதைத்தொடர்ந்து இது குறித்து ரவிச்சந்திரன் புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக குமாரசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள உஷாராணியை வலைவீசி தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்