வள்ளலார் கருத்துக்களை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்

மாணவர்களுக்கு ஒழுக் கத்தை கற்றுக்கொடுக்க வள்ளலார் கூறிய கருத்துக்களை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் பேசினார்.

Update: 2018-02-04 23:00 GMT
சென்னை,

ராமலிங்கர் இலக்கிய அறக்கட்டளையின் 11-வது ஆண்டு விழா சென்னை ஆழ்வார்பேட்டையில் நேற்று நடந்தது. விழாவுக்கு, ஊரன் அடிகள் தலைமை தாங்கினார். ஐதராபாத் ஐகோர்ட்டு நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன், சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராமலிங்கர் இலக்கிய அறக்கட்டளையின் தலைவர் வே.சொக்கலிங்கம் சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கினார்.

விழாவில் வக்கீல் பின்னலூர் மு.விவேகானந்தன் எழுதிய ‘அருட்பிரகாச வள்ளலாரின் அருட்சிந்தனைகள்’ என்ற புத்தகத்தை நீதிபதி ஆர்.மகாதேவன் வெளியிட சைவ சித்தாந்த மன்றத்தலைவர் நல்லூர் சா.சரவணன் பெற்றுக்கொண்டார். பேராசிரியர் வை.நமசிவாயத்துக்கு வள்ளலார் இலக்கிய விருதை நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் வழங்கினார்.

விழாவில் நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் பேசியதாவது: வள்ளலார் கூறிய கருத்துக்களை பாடத்திட்டத்தில் சேர்த்தால், மாணவர்களுக்கு ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்க முடியும். பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகள் நடத்துவதற்கு தகுதியான ஆசிரியர்கள் இல்லை என்று கூறப்படுகிறது. மற்ற பாடங்களை நடத்துவதற்கு அதில் உள்ள ஞானம் மட்டும் போதும். ஆனால் நீதிபோதனை வகுப்புகள் நடத்த ஒழுக்கம் வேண்டும். ஒழுக்கம் இல்லாதவன் நீதி போதனை வகுப்பு நடத்த முடியாது.

எது சரி, எது நீதி என்பதை தீர்மானிப்பதிலேயே இந்த காலத்தில் சிக்கல்கள் காணப்படுகிறது. படிப்பது ஒன்றாகவும், நடைமுறையில் மற்றொன்றாகவும் என முரண்பாடாக உள்ளது. இதனால்தான் பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகள் போய்விட்டதோ என்று நான் நினைக்கிறேன். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நீதி போதனை வகுப்புகளில் வள்ளலார் வாழ்க்கை குறிப்பை கட்டாய பாடமாக்கவேண்டும்.

வாழ்க்கையில் வெற்றி பெறாவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் நல்லவனாக வாழவேண்டும் என்பதை குழந்தைகளுக்கு எடுத்துச்சொல்லவேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். நாம் முழுமையாக அந்த கடமையை செய்யவேண்டுமானால் குழந்தைகளுக்கு ஒழுக்கத்தை கற்பிக்க வள்ளலார் வாழ்க்கையை எடுத்துச்சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நீதிபதி ஆர்.மகாதேவன் பேசியதாவது: வள்ளலார் மானுட வாழ்க்கைக்கான வழிமுறைகளை தந்துள்ளார். மானுட வாழ்க்கையில் மனிதனாக பிறந்த ஒருவன் அவன் வாழுகின்ற வாழ்க்கையையும், பிறந்ததன் பயனையும் அடைய வேண்டும் என்றால் இறை என்னும் ஆனந்தத்தை தரிசிக்கக்கூடிய தன்மை மிக்கவராக வாழ்க்கையை மாற்றிக்கொள்ள வேண்டும்.

முன்னதாக வக்கீல் பி.ஆர். கணேசன் இறைவணக்கம் பாடினார். ந.ஆவுடையப்பன் வரவேற்புரையாற்றினார். அறக்கட்டளையின் துணைத்தலைவர் நீ.சஞ்சீவி நன்றியுரை நிகழ்த்தினார். விழாவில் நீதிபதி தண்டபாணி உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்