தீபாவளி பண்டிகை நேரத்தில் ஒரு மாதத்திற்கு முன்பே வியாபாரம் செய்ய உரிமம் வழங்கவேண்டும்

தீபாவளி பண்டிகை நேரத்தில் ஒரு மாதத்திற்கு முன்பே வியாபாரம் செய்ய உரிமம் வழங்கவேண்டும் என்று பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு மாநில தலைவர் கூறினார்.

Update: 2018-02-04 22:45 GMT
திருச்சி,

தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு திருச்சியில் நேற்று புதிதாக தொடங்கப்பட்டு உள்ளது. இந்த அமைப்பின் தலைவராக ராஜாசந்திரசேகரன், பொது செயலாளராக இளங்கோவன், பொருளாளராக கந்தசாமி ராஜன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் முதுநிலை தலைவர் ரத்தினவேலு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக கூட்டமைப்பு தலைவர் ராஜா சந்திரசேகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் சுமார் 10 ஆயிரம் பட்டாசு வணிகர்கள் உள்ளனர். இந்த கூட்டமைப்பில் 800 பேர் பதிவு செய்து உள்ளனர். பட்டாசு வியாபாரத்தில் உள்ள பல்வேறு பிரச்சினைகளை தீர்த்து வைப்பது தான் இந்த கூட்டமைப்பின் நோக்கமாகும். தீபாவளி பண்டிகை நேரத்தில் பட்டாசு விற்பதற்கு பல்வேறு இடையூறுகள் செய்யப்படுகிறது. தீபாவளிக்கு ஒரு மாதத்திற்கு முன்பே பட்டாசு கடை திறப்பதற்கான உரிமத்தை (லைசென்சு) வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஒரு மாதத்திற்கு முன்பாகவே உரிமம் தந்தால் தான் பொதுமக்கள் கடைசி நேர நெருக்கடியை தவிர்த்து எளிதாக பட்டாசுளை வாங்கி செல்ல முடியும். எனவே பாதுகாப்பாக பட்டாசு விற்பதற்கு வசதியாக தீபாவளிக்கு 2 நாட்களுக்கு முன் உரிமம் வழங்கும் முறையை கைவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பட்டாசு வியாபாரிகள் மற்றும் சிவகாசி பட்டாசு ஆலை அதிபர்கள் கலந்து கொண்டனர். முடிவில் திருச்சி மாவட்ட பட்டாசு வியாபாரிகள் சங்க தலைவர் ரெங்கசாமி நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்