காதல் விவகாரத்தில் மோதல்; ஆட்டோ தீ வைத்து எரிப்பு போக்குவரத்து பாதிப்பு

ஏற்காடு அருகே காதல் விவகாரத்தில் மோதல் ஏற்பட்டு ஆட்டோ தீ வைத்து எரிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2018-02-04 23:00 GMT
ஏற்காடு,


சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது வெள்ளக்கடை. இந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும் காதல் மலர்ந்தது. கடந்த 29–ந்தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி மல்லூர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த பெண்ணின் குடும்பத்தார், அந்த வாலிபர் வீட்டுக்கு சென்று அங்கிருந்தவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து காதல் ஜோடியின் பெற்றோரை அழைத்து மல்லூர் போலீசார் சமரசப்படுத்தினார்கள்.


இதன்பின்னர் நேற்று இரவு 7 மணியளவில் ஆட்டோ மற்றும் மோட்டார்சைக்கிள்களில் அந்த வாலிபரின் அண்ணன் மற்றும் சிலர் அந்த இளம்பெண்ணின் வீட்டுக்கு சென்றனர். பின்னர் ரோட்டில் நின்று கொண்டு கல்லால் இளம்பெண் வீட்டின் மீது அவர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் அந்த இளம்பெண்ணின் தாய் உள்பட 4 பேர் காயம் அடைந்தனர். இதை அறிந்ததும் அந்த பகுதி மக்கள் திரண்டு வந்து வாலிபரின் அண்ணன் மற்றும் அவருடன் வந்தவர்களை விரட்டியடித்தனர். அப்போது ரோட்டில் ஆட்டோவை நிறுத்தி விட்டு மோட்டார்சைக்கிளில் தப்பிச்சென்றனர்.

இதன்பிறகு மர்ம நபர்கள் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த ஆட்டோவை தீ வைத்து எரித்தனர். இதில் அந்த ஆட்டோ எரிந்து நாசம் ஆனது. இதனால் ஏற்காட்டில் இருந்து வெள்ளக்கடைக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பஸ் மற்றும் வாகனங்கள் அந்த வழியாக செல்லவில்லை.

இதுகுறித்து ஏற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்