வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்த 4 பேர் கைது

வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டியதுடன், அவரை தாக்கி செல்போன், கைக்கெடிகாரம், பணத்தை பறித்துச்சென்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகின்றனர்.

Update: 2018-02-04 23:15 GMT
பெரம்பூர்,

வேலூர் மாவட்டம் ஆம்பூரைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 22). பி.ஏ. பட்டதாரியான இவர், அரசு தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தார். அவருக்கு சென்னை கொடுங்கையூரில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு இருந்தது. தேர்வு எழுதுவதற்காக நேற்று முன்தினம் இரவு வேலூரில் இருந்து சென்னை வந்த அவர், எருக்கஞ்சேரி பஸ் நிறுத்தத்தில் படுத்து தூங்கினார்.

அப்போது அங்கு ஆட்டோவில் வந்து இறங்கிய 6 பேர், அவரை கத்தியை காட்டி மிரட்டியதுடன், அவரை சரமாரியாக தாக்கினர். பின்னர் அவரிடம் இருந்த செல்போன், கைக்கெடிகாரம் மற்றும் ரூ.2 ஆயிரம் இருந்த மணிபர்சு ஆகியவற்றை பறித்து விட்டு ஆட்டோவில் தப்பிச்சென்றனர்.

அதிர்ச்சி அடைந்த வெங்கடேசன் கூச்சலிட்டார். அப்போது அந்த வழியாக வந்த ஒருவரின் மோட்டார் சைக்கிளில் ஏறி மர்மநபர்கள் சென்ற ஆட்டோவை பின்தொடர்ந்து விரட்டிச்சென்றார். சர்மா நகர் அருகே சென்றபோது அங்கு வந்த ரோந்து போலீசாரிடம் நடந்த விவரத்தை கூறினார்.

உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர்கள் துளசிராமன், அருணாசலம் ஆகியோர் அந்த ஆட்டோவை விரட்டிச்சென்று மடக்கினர். அதில் இருந்த 4 பேரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். 2 பேர் தப்பி ஓடி விட்டனர்.

பிடிபட்ட 4 பேரையும் கொடுங்கையூர் போலீசில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் புகழேந்தி, சப்-இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் ஆகியோர் நடத்திய விசாரணையில் அவர்கள், சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முத்து (23), முத்தமிழ் நகரைச் சேர்ந்த முகமது அசாருதீன் (19) மற்றும் புளியந்தோப்பு, பெரியமேடு பகுதியை சேர்ந்த 18 வயது வாலிபர்கள் 2 பேர் என தெரியவந்தது.

4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மணிபர்சு, கத்தி, ஆட்டோவை பறிமுதல் செய்தனர். செல்போனுடன் தப்பி ஓடிய 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்