ஆவடியில் பாழடைந்த கட்டிடத்தில் செயல்படும் நூலகத்தை இடம் மாற்ற கோரிக்கை

ஆவடியில் பாழடைந்த வணிக வளாக கட்டிடத்தில் செயல்படும் கிளை நூலகத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2018-02-04 22:30 GMT
ஆவடி,

ஆவடி கிளை நூலகம், ஆவடி வீட்டுவசதிவாரிய குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள வணிக வளாகத்தின் மேல் தளத்தில் செயல்பட்டு வருகிறது. வணிக வளாகத்துக்கு என்று கட்டப்பட்ட இந்த கட்டிடம் செயல்படாமல் பாழடைந்து கிடக்கிறது. இந்த கட்டிடத்தில்தான் கடந்த 25 ஆண்டுகளாக நூலகம் செயல்பட்டு வருகிறது.

சுமார் 5,500 உறுப்பினர்களை கொண்ட இந்த நூலகத்தில், தினமும் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர். ஆனால் நூலகம் அமைந்துள்ள கட்டிடத்தில் போதிய பாதுகாப்பு இல்லாததால் பெண்கள், மாணவிகள் நூலகத்துக்கு வந்து செல்லவே அச்சப்படுகின்றனர்.

நூலகம் செயல்படும் கட்டிடத்தின் மேற்கூரையில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் மேற்கூரை எப்போது இடிந்து விழுமோ என்ற பயம் காரணமாக நூலகத்துக்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

மேலும் மழை பெய்யும்போது மேற்கூரையில் இருந்து மழைநீர் கசிந்து விழும் என்பதால் புத்தகங்களை தார்ப்பாய் போட்டு மூடிவைக்கும் நிலை காணப்படுகிறது. இந்த கட்டிடம் தாழ்வான பகுதியில் இருப்பதால் மழை காலங்களில் நூலகத்தை சுற்றி மழைநீர் சூழ்ந்து விடுகிறது. இதனால் பொதுமக்கள் யாரும் நூலகத்துக்கு வந்து செல்ல முடியாமல் சிரமம் அடைகிறார்கள்.

நூலகம் செயல்படும் வணிக வளாகத்தை சுற்றிலும் தரை தளத்தில் புல், செடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. கீழ்தளத்தில் உள்ள கடைகள் செயல்படாமல் கிடப்பதால் அங்கு இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மது அருந்துவது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உருவாக்கப்படும்போது பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அரசு தரப்பில் நூலகம், பூங்கா, பஸ் நிலையம், மருத்துவமனை உள்ளிட்டவைகள் அமைக்க தனித்தனியாக இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால் நூலகத்துக்கு என்று ஒதுக்கப்பட்ட இடத்தில் நூலத்தை அமைக்காமல் பாழடைந்து காணப்படும் இந்த வணிக வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.

எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நூலகத்துக்கு என்று ஒதுக்கப்பட்ட இடத்தில் சொந்த கட்டிடம் கட்டி அங்கு செயல்படுத்த வேண்டும். அல்லது பாழடைந்த கட்டிடத்தில் செயல்படும் இந்த நூலகத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். அதுவும் இல்லாவிட்டால் கட்டிடத்தையாவது சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்