பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக ரேஷன் கடை மூடப்பட்டது; பொதுமக்கள் சாலை மறியல்

கோட்டூர் அருகே பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக ரேஷன் கடையை மூடியதால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2018-02-04 23:00 GMT
கோட்டூர்,

திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகே களப்பால் கடைவீதியில் ரேஷன் கடை உள்ளது. இதில் கோவில்களப்பால், புத்தூர், குறிச்சிமூலை, பட்டமடையான், அகரம் களப்பால் உள்பட 13 கிராமங்களை சேர்ந்த 1,500 குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் பொருட்கள் வாங்குகிறார்கள். ஒரே நேரத்தில் அதிக மக்கள் ரேஷன் பொருட்கள் வாங்க வருவதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு அடிக்கடி தகராறு ஏற்படுகிறது. மேலும் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலை பொருட்கள் வாங்க ரேஷன் கடை முன்பு அதிகம் மக்கள் கூடியதால் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டதால் கடை மூடப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் களப்பால் கடைவீதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது குறிச்சிமூலை ஊராட்சியை சேர்ந்த 7 கிராமங்களுக்கு தனியாக ரேஷன் கடை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோஷங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பாலையூர் வருவாய் ஆய்வாளர் இளமதி, களப்பால் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பொதுமக்கள் சார்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் மாரிமுத்து, ஒன்றிய துணை செயலாளர் செந்தில்நாதன், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், முன்னாள் ஊராட்சி தலைவர் அறிவுடைநம்பி ஆகியோர் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.

இதில் இன்னும் 1 மாதத்திற்குள் குறிச்சிமூலை ஊராட்சியில் புதிய ரேஷன் கடை திறக்கப்படும். அதுவரை களப்பால் ரேஷன் கடையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விடுபடாமல் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்.

மேலும் ஸ்மார்ட்டு ரேஷன் கார்டில் உள்ள குளறுபடிகள் சரி செய்து தரப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் களப்பால்-மன்னார்குடி சாலையில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது. 

மேலும் செய்திகள்