பாசனத்துக்காக தண்ணீர் திறப்பதால் குறைந்து வரும் வைகை அணையின் நீர்மட்டம்

பாசனத்துக்காக தண்ணீர் திறப்பதால் வைகை அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

Update: 2018-02-04 22:45 GMT
ஆண்டிப்பட்டி,

ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து மதுரை மாநகராட்சி பகுதிக்கு குடிநீர் செல்கிறது. மேலும் சேடப்பட்டி கூட்டுக்குடிநீர் திட்ட பகுதிகளின் குடிநீர் ஆதாரமாகவும் இந்த அணை விளங்குகிறது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் இருந்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் மதுரை மாவட்ட விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

ஆனால் போதுமான அளவு மழை பெய்யாத காரணத்தால் வைகை அணைக்கு நீர்வரத்து குறைந்து விட்டது. அதேநேரத்தில் பாசனத்திற்கு தண்ணீர் தொடர்ந்து திறக்கப்படுவதால் அணை நீர்மட்டம் மள, மளவென குறைந்து வருகிறது. இதனால் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பாறைகள் வெளியே தெரிகின்றன.

வைகை அணையில் ஏற்கனவே 15 அடி முதல் 20 அடி வரை வண்டல் மண் படிந்துள்ளதால், தற்போது இருக்கும் தண்ணீரின் மூலம் கோடைக்காலத்தில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அணையில் இருக்கும் தண்ணீரை குடிநீர் தேவைக்கு மட்டும் பயன்படுத்தினால், 100 நாட்களுக்கு மட்டுமே வழங்க முடியும் என்று பொதுப்பணித்துறையினர் கூறுகின்றனர்.

ஆனால் அணையில் இருந்து தொடர்ந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் கோடையில் வைகை அணையை குடிநீர் ஆதாரமாக கொண்டுள்ள மதுரை மாநகரில் கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

இந்தநிலையில் நீர் இருப்பு குறைந்த காரணத்தால், வைகை அணையில் இருந்து மதுரை மற்றும் சேடப்பட்டி கூட்டுக்குடிநீர் திட்ட பகுதிகளுக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி குடிநீருக்கு திறக்கப்படும் தண்ணீரை வினாடிக்கு 60 கனஅடியில் இருந்து 40 கனஅடியாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வைகை அணைக்கு, இக்கட்டான நிலையில் கை கொடுக்கும் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டமும் தற்போது 114.20 அடியாக குறைந்துள்ளது. முல்லைப்பெரியாறு அணையில் இருந்து இன்னும் 6 அடி அளவுக்கு மட்டுமே, தேனி மாவட்டத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 39.26 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 158 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்துக்கும், குடிநீர் தேவைக்கும் சேர்த்து வினாடிக்கு 960 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. அணையின் மொத்த நீர் இருப்பு 945 மில்லியன் கனஅடியாக காணப்பட்டது. 

மேலும் செய்திகள்