ரெயிலில் இருந்து வாலிபரை தள்ளி கொன்ற சம்பவம் போலீசுக்கு பயந்து தற்கொலைக்கு முயன்ற திருநங்கை

ரெயிலில் இருந்து வாலிபரை தள்ளி கொல்ல முயன்ற சம்பவத்தில் போலீஸ் தேடிய திருநங்கை விஷத்தை குடித்து தற்கொலை செய்ய முயன்றார். அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Update: 2018-02-04 23:00 GMT
திருப்பத்தூர்,

ஆந்திர மாநிலம் விஜயவாடாவை அடுத்த ஜி.பட்டவாடா கிராமத்தை சேர்ந்தவர் சாமிதுரா. இவரது மகன் கலும்சத்யநாராயணா (வயது 30). அதே பகுதியை சேர்ந்தவர்கள் காரம்வீரபாபு (20), பாப்பண்ணாதுரா (20), கலும்சாமிதுரா (23). இவர்கள் 4 பேரும் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலையில் சேர்வதற்காக ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரிலிருந்து கேரள மாநிலம் ஆலப்புழா செல்லும் ‘பொகாரோ எக்ஸ்பிரஸ்’ ரெயிலில் நேற்று முன்தினம் பயணம் செய்தனர்.

அந்த ரெயில் திருப்பத்தூரை அடுத்து கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது, கலும் சத்யநாராயாணாவும், காரம்வீரபாபு ஆகிய 2 பேரும் படிக்கட்டின் அருகில் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது அவர்களிடம் அங்கு வந்த திருநங்கைகள் சிலர் பிச்சை கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் 2 பேரும் பணம் எதுவும் இல்லை என கூறினர். இதனால் ஆத்திரமடைந்த திருநங்கைகள் கலும்சத்யநாராயணா அடித்து உதைத்து, ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது.

இதில் படுகாயம் அடைந்த கலும்சத்யநாராயணா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரை காப்பாற்ற முயன்ற காரம்வீரபாபுவும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக அவர் ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து சேலம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் திருப்பத்தூர் அருகே உள்ள பாச்சல் ஜெய்பீம் நகரை சேர்ந்த சக்தி என்ற சுவேதா (36) என்ற திருநங்கை உள்பட சில திருநங்கைகள் தான் கலும்சத்யநாராயணாவை கீழே தள்ளி கொலை செய்தனர் என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் போலீஸ் விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்ய முடிவு செய்த சுவேதா விஷம் குடித்து விட்டார். மயங்கிய நிலையில் இருந்த சுவேதாவை சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடல் நலம் சற்று தேறிய நிலையில் அங்கு வந்த சேலம் ரெயில்வே போலீசார் சுவேதாவை விசாரணைக்காக சேலத்திற்கு அழைத்து சென்றனர்.

இதனிடையே தகவல் அறிந்து அங்கு திருநங்கைகள் திரண்டு வந்தனர். அவர்கள் கூறுகையில் இந்த சம்பவத்தில், உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்றனர். 

மேலும் செய்திகள்