மாமல்லபுரம் அருகே ராட்சத வலையில் சிக்கிய ரூ.6 லட்சம் மீன்கள், மீனவர்கள் மகிழ்ச்சி

மாமல்லபுரம் அருகே கடலில் மீனவர்கள் வீசிய ராட்சத வலையில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள 5 டன் மீன்கள் சிக்கியதால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2018-02-04 22:45 GMT
மாமல்லபுரம்,

மாமல்லபுரம் அடுத்த தேவனேரி பகுதி மீனவர்கள் 50 பேர் அந்த பகுதி மீனவர் கூட்டுறவு சங்கத்தலைவர் சிவானந்தம் தலைமையில் நேற்று ஒரு பெரிய படகில் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிப்பதற்காக சென்றனர். அவர்கள் ராட்சத வலையை வீசிவிட்டு, மீன்கள் அகப்படும் வரை காத்திருந்தனர். ஒரு மணி நேரம் கழித்து அவர்கள் வீசிய வலையில் ஏராளமான மீன்கள் சிக்கி கொண்டன. வலையில் சிக்கிய மீன்கள் படகை கடலுக்குள் இழுத்து சென்றன. மீனவர்கள் கரைப்பகுதியில் உள்ள சக மீனவர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர்.

பிறகு மற்றொரு படகில் கடலுக்கு சென்ற மீனவர்கள் அவர்களுடன் இணைந்து மீன்கள் மாட்டிய ராட்சத வலையை கரை பகுதிக்கு இழுத்து வந்தனர். பின்னர் கடற்கரை மணலில் மீன்களை கொட்டினர்.

கடல் சீற்றம் தணிந்து 3 மாதங்களுக்கு பிறகு அதிக மீன்கள் கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 5 டன் எடை கொண்ட அந்த மீன்கள் ரூ.6 லட்சம் மதிப்பு உடையதாகும். மொத்தமாக மீன்கள் பிடிபட்ட தகவல் கிடைத்ததும் சென்னையை சேர்ந்த பிரபல ஓட்டல் நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு இங்கு வந்து மீன்களை மொத்தமாக வாங்கி சென்றன. கடற்கரையில் மீன்கள் மொத்தமாக கிடப்பதை பார்த்த பொதுமக்கள் பலர் அங்கு வந்து வேடிக்கை பார்த்து விட்டு சென்றனர்.

இது குறித்து தேவனேரி மீனவர் கூட்டுறவு சங்கத்தலைவர் சிவானந்தம் கூறும்போது:-

இது போல் மீன்கள் மொத்தமாக பிடிபடுவது எப்போதாவது ஒரு முறைதான் நிகழும். ஆண்டுக்கு ஒரு முறையோ, இரு முறையோ கடலில் கும்பலாக தண்ணீரில் நீந்தும் மீன்கள் இதுபோல் மொத்தமாக மாட்டிக்கொள்ளும். இது போன்று மீன்கள் பிடிபடுவது அரிது.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்