பெண் கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள்

பெண் கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக் கப்பட்டுள்ளது.

Update: 2018-02-04 22:00 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு, திருமணம் கிராம பஸ் நிறுத்தம் அருகே கடந்த 2-ந் தேதி வண்டலூர் - நெமிலிச்சேரி வெளிவட்ட சாலையோரம் உள்ள முள்புதரில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இறந்துகிடந்தார். அந்த பெண்ணின் நெற்றி, கன்னம், தோள்பட்டை ஆகிய இடங்களில் பலத்த வெட்டுக்காயங்கள் இருந்தன.

அதோடு மூக்கு அறுக்கப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் யார் என்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில் கொலை வழக்கு தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது:-

கொலை செய்யப்பட்ட அந்த பெண்ணின் இடது கையில் ஆர்.முனுசாமி, பவித்ரா, வீணா என்றும் வலது கையில் சாந்தா என்றும் பெயர்கள் பச்சை குத்தப்பட்டிருந்தது. அவர் மெட்டி மற்றும் மூக்குத்தி அணிந்திருந்தார். இந்த கொலையில் குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்