திருமணத்திற்கு சில மணி நேரத்துக்கு முன்பாக புதுமாப்பிள்ளை தூக்கு போட்டு தற்கொலை

ராதாபுரம் அருகே, திருமணத்திற்கு சில மணி நேரத்துக்கு முன்பாக புதுமாப்பிள்ளை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை அறிந்த புதுப்பெண், பெற்றோர் கதறி அழுதனர். இதற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-02-04 23:00 GMT
ராதாபுரம்,


நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகில் உள்ள வடக்கு குப்பளம்பாடு கிராமத்தை சேர்ந்தவர் செல்லத்துரை. விவசாயி. இவருடைய மகன் வெங்கடேஷ்(வயது26). பி.காம் பட்டதாரி. இவர், தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு காற்றாலை நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்தார்.

இவருக்கும், அதே ஊரை சேர்ந்த 25 வயதான பி.காம் பட்டதாரி பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களுக்கு நேற்று காலையில் வள்ளியூரில் உள்ள ஒரு மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்தது. திருமணத்துக்கான ஏற்பாடுகளில் இரு வீட்டாரும் தீவிரமாக இருந்து வந்தனர்.


திருமணத்துக்கு பத்திரிக்கை அச்சடிக்கப்பட்டு உறவினர்கள், நண்பர்கள் வீடுகளுக்கு கொடுக்கப்பட்டது. வெங்கடேஷூம் சில நாட்களுக்கு விடுமுறை எடுத்து கொண்டு வந்து, திருமணத்துக்கான அழைப்பிதழை நண்பர்கள், உறவினர்கள் வீடுகளுக்கு கொடுத்து வந்தார். இருவீடுகளிலும் முகூர்த்தக்கால் ஊன்றப்பட்டு, பந்தல் போடப்பட்டு இருந்தது. ஒரே ஊர் என்பதால், திருமணம் களைகட்டி இருந்தது. இரு வீடுகளுக்கும் நெருங்கி உறவினர்கள் நேற்று முன்தினமே குடும்பத்தினருடன் வந்திருந்தனர்.


வள்ளியூரில் திருமண மண்டபமும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தோரணம் கட்டப்பட்டு இருந்தது. நேற்று காலையில் மாப்பிள்ளை அழைப்புக்கு பெண் வீட்டார் தயாராக இருந்தனர். திருமண மண்டபத்தில் விருந்து தயாரிக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வந்தது.

நேற்று காலையில் மாப்பிள்ளை அழைப்புக்கு பெண் வீட்டார் வர இருந்த நிலையில், வெங்கடேஷ் அறை பூட்டப்பட்ட நிலையில் இருந்தது. பெற்றோர் அவர் தூங்கிய அறையை தட்டி எழுப்ப சத்தம் போட்டனர். நீண்டநேரமாக கதவை தட்டியும், பதில் சத்தம் ஏதும் வராததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, அவர் தூக்கில் தொங்கி கொண்டு இருந்தார்.


பதறிப்போன அனைவரும் அவரை மீட்டு, நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அவரை கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்து போனார். அவருடைய உடலை பார்த்து பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்த ராதாபுரம் போலீசார் அவருடைய உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.


திருமணத்துக்காக முதல் நாள் இரவில் இருந்தே மணக்கோலத்தில் காத்திருந்த புதுப்பெண் அதிர்ச்சி அடைந்து கதறி துடித்தார். அவரை உறவினர்கள் தேற்றியபடி இருந்தனர். அவருடைய உறவினர்களும், நண்பர்களும் கதறி அழுதனர். திருமண சடங்குகள் நிறுத்தப்பட்டன.

வள்ளியூரில் நேற்று நடைபெற இருந்த திருமண மண்டபம் களைஇழந்தது. அங்கு கூடியிருந்த பெண் வீட்டார் வெளியேறி சென்றனர்.


திருமணம் நடைபெற இருந்த சில மணி நேரத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வெங்கடேஷ் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து ராதாபுரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்