அனுபவ புத்தக ஆசிரியை

ஷவி சர்மா சூரத்தை சேர்ந்த 24 வயது பெண் எழுத்தாளர். படைப்பாளராகும் எண்ணத்தில் சி.ஏ. படிப்பை பாதியில் கைவிட்டவர். யதார்த்த வாழ்வியல் சம்பவங்களை கதைகளாக கோர்த்து விறுவிறுப்பான நாவல்களாக எழுதி வருகிறார்.

Update: 2018-02-04 09:45 GMT
ஷவி சர்மாவின் முதல் நாவலான ‘எவரி ஒன் ஹேஸ் எ ஸ்டோரி’ வெளியான 100 நாட்களிலேயே ஒரு லட்சம் பிரதிகளை விற்று சாதனை படைத்தது. இரண்டாவது நாவலான ‘நாட் யுவர் ஸ்டோரி’-க்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

‘‘என் வாழ்வில் நடந்த சம்பவங்கள், கேள்விப்பட்ட விஷயங்களை கதைகளாக எழுதும் ஆர்வம் எனக்குள் உருவானது. அப்போது சி.ஏ. படிப்பை தொடர்ந்து கொண்டிருந்தேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் கதைகள் எழுதினேன். எழுத்தாற்றல் என் சிந்தனையை தெளிவுபடுத்தியது. எழுதுவது எனக்கு பிடித்திருந்ததால் அதையே முழுநேர தொழிலாக மாற்றிக்கொள்ள முடிவு செய்து படிப்பை கைவிட்டேன்.

முதல் நாவலை எழுதி முடித்ததுமே ‘இந்த உலகத்திற்கு கொடுப்பதற்கு என்னிடம் நல்ல கதைகள் இருக்கிறது’ என்ற நம்பிக்கை பிறந்தது. அந்த நாவலை சுயமாகவே வெளியிட்டுவிடலாம் என்றும் முடிவு செய்தேன். புத்தகமாக வெளியிட மற்றவர்களை சார்ந்திருந்தால் சில மாதங்கள் காத்திருக்க வேண்டும். அதற்கு நான் விரும்பவில்லை. என்னுடைய கதைக்கு சமூக ஊடகங்களும், இணையதளமும் உறுதுணையாக இருக்கும் என்று நம்பினேன். அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. என் படைப்பை பாராட்டி சமூக வலைத்தளங்கள், ஊடகங்களில் எழுதப்பட்டிருந்த விமர்சனங்களை படிப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற உத் வேகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

ஒவ்வொரு நாளும் வாசகர்களிடம் இருந்து நூற்றுக்கணக்கான மின்னஞ்சல்கள் வருகின்றன. அவர்களுடைய கதைகளையும் என்னிடம் பகிர்ந்து கொள்கிறார்கள். என்னுடைய கதைகள் அவர்கள் வாழ்க்கையில் நடந்த ஒருசில சம்பவங்களின் பிரதிபலிப்பாக இருப்பதாகவும் கூறுகிறார்கள். அதுவே என் படைப்புக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறேன். 17 வயது வாலிபன் ஒருவன் வாழ்க்கை மீது நம்பிக்கை இழந்து தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் இருந்திருக்கிறான். என் புத்தகத்தை படித்த பிறகு அவனுக்குள் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அவனுடைய கனவுகளை நனவாக்க ஊக்கமளிக்கும் விதத்தில் எனது புத்தகம் அமைந்திருப்பதாக மின்னஞ்சலில் குறிப்பிட்டிருந்தான். இது என் வாழ்க்கையின் சந்தோஷமான தருணங்களில் ஒன்றாகும்’’ என்கிறார்.

ஷவி சர்மாவின் நாவல்கள் மூன்று, நான்கு கதாபாத்திரங்களை பின்னணியாக கொண்டு திரைப்படம் போல விறுவிறுப்பான கதைக்களத்துடன் நகர்கிறது.

‘‘என் முதல் நாவலில் நட்பு, காதல், கவலை, லட்சிய கனவு என வாழ்வியலின் அனைத்து சாரம்சங்களையும் பதிவு செய்தேன். அவை களுக்கு உயிரோட்டம் கொடுப்பதற்காக மீரா, கபீர், நிஷா, விவான் ஆகிய நான்கு கதாபாத்திரங்களை உருவாக்கினேன். மீரா, அனைவரையும் கவரும் உணர்வுப்பூர்வமான கதைகளை எழுதும் எழுத்தாளராக வேண்டும் என்ற லட்சியம் கொண்டவர். வங்கியில் உதவி மானேஜராக பணிபுரியும் விவான் உலக சுற்றுப்பயணங்களில் நாட்டம் கொண்டவர். காபி ஷாப்பில் வேலைபார்க்கும் கபீர் சொந்தமாக காபி ஷாப் தொடங்க ஆசைப்படுகிறார். அங்கு அடிக்கடி காபி அருந்த வரும் நிஷா மீது கபீர் காதல் வசப்படுகிறார். இந்த நான்கு பேரின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை சுவாரசியமான கதைகளாக விவரித்தேன்.

இரண்டாவது கதையையும் காதலை மையப் படுத்தியே உருவாக்கினேன். அந்த புத்தகம் நம் சொந்த கதைகளை விவரிக்கும் சக்தி அனைவருக்கும் இருப்பதை உணர்த்தும் விதமாக இருக்கிறது. புத்தகங்களை எழுதி முடித்ததும் அதனை இறுதி செய்வதற்கு நான்கு, ஐந்து மாதங்கள் எடுத்து கொண்டேன். நிஜ வாழ்க்கை அனுபவங்களை வெளிப்படுத்துவதன் மூலமும், என்னைச் சுற்றி இருக்கும் மக்களை கவனிப்பதன் மூலமும் என்னால் மற்றவர்களை ஈர்க்கும் அளவுக்கு எழுத முடிகிறது.

என் புத்தகங்கள் விற்பனையாவதற்கு இணையதளங்களின் பங்கு முக்கியமானது. புத்தகங்களை வெளியிட்டபோது சிறந்த உள்ளடக்கத்தை சமூகவலைத்தளங்களில் ஆக்கப்பூர்வமாக பதிவு செய்தேன். அது மக்களை எளிதாக சென்றடைந்து விட்டது’’ என்கிறார்.

மேலும் செய்திகள்