குழந்தை திருமண விழிப்புணர்வு

சிறுவயதில் குழந்தை திருமணத்தில் இருந்து தப்பித்தவர், இன்று பள்ளி ஆசிரியையாகி, குழந்தை திருமணத்திற்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். அவர் பெயர் விஜயலட்சுமி.

Update: 2018-02-04 07:45 GMT
ராஜஸ்தான் மாநிலத்தில் குழந்தை திரு மணம் பெருமளவு நடந்து கொண்டிருக்கிறது. அங்குள்ள பாஜி கிராமத்தை சேர்ந்தவரான விஜயலட்சுமி சுற்றுப்புற பகுதியில் வசிக்கும் மக்களிடமும், தனது பள்ளி மாணவிகள் மத்தியிலும் குழந்தை திருமணம் செய்வதால் ஏற்படும் பிரச்சினைகளை விளக்குகிறார். குழந்தை திருமணத்தால் உயிரிழந்த தனது நெருங்கிய தோழியின் மரணத்தையும் அவர் களிடம் நினைவு கூறுகிறார்.

‘‘என் தோழிக்கு 13 வயதில் திருமணம் செய்து வைத்தார்கள். 14 வயதில் கர்ப்பிணியாகிவிட்டாள். அவள் உடல்வாகு கருவை சுமக்கும் அளவுக்கு வலிமையாக இல்லை. பிரசவத்தின்போது பரிதாபமாக உயிரிழந்து போனாள். அவள் நினைவுகளில் இருந்து மீள்வதற்குள் என் வீட்டில் திருமண பேச்சை எடுத்தார்கள். நான் தோழியை காரணம் காட்டி திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று பிடிவாதம் காட்டினேன். ‘நமது கிராமத்தில் நீ மட்டும்தான் இந்த வயதுக்குள் திருமணம் செய்யாமல் இருக்கிறாய். ஊருக்கு கட்டுப்பட்டு கட்டாயம் திருமணம் செய்தாக வேண்டும்’ என்றார்கள்.

நான் என் முடிவில் உறுதியாக இருந்ததால் பள்ளிக்கு அனுப்பாமல் இரண்டு நாட்கள் வீட்டுக்குள் அடைத்துவைத்தார்கள். தண்ணீரோ, உணவோ சாப்பிடாமல் இருந்தேன். அதன் பிறகு திருமணத்திற்கு என்னை கட்டாயப்படுத் தவில்லை. படிப்பில் கவனம் செலுத்தினேன். நான் மட்டும் திருமணம் செய்து கொள்ளாமல் படித்து கொண்டிருப்பதை அறிந்த மற்ற கிராமத்தை சேர்ந்த சிறுமிகளும் என்னைப்போல் தங்கள் திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்க தொடங்கினார்கள். என்னை சந்தித்து அவர் களுடைய வீட்டிற்கு வந்து பேசுமாறு அழைத்தார்கள். நானும் அந்த சிறுமிகளின் பெற்றோரை சந்தித்து திருமணம் செய்துவைக்கும் முடிவை கைவிடுமாறு வேண்டினேன். மாதம் ஒருமுறை கிராம மக்களை சந்தித்து பேசினேன். உயர்கல்வியை தொடர்ந்த போதிலும் என்னுடைய விழிப்புணர்வு பிரசாரம் தொடர்ந்து கொண்டிருந்தது. என்னை நிறைய மாணவிகள் ரோல் மாடலாக பின்பற்றி குழந்தை திருமணத்தில் இருந்து மீண்டு வந்தார்கள்’’ என்கிறார்.

விஜயலட்சுமி உயர்கல்வியை முடித்த பிறகு தனியார் பள்ளியில் ஆசிரியை வேலையில் சேர்ந்திருக்கிறார். இப்போது மாணவிகளுடன் இணைந்து வீடு வீடாக சென்று குழந்தை திருமணத்திற்கு எதிரான விழிப்புணர்வில் முழுமூச்சாக ஈடுபட்டு வருகிறார். அவருடைய முயற்சியால் 13 கிராமங்களில் குழந்தை திருமண சம்பிரதாயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. 50-க்கும் மேற்பட்ட சிறுமிகள் படிப்பை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

‘‘ஆரம்பத்தில் நிறைய பெற்றோர் என்னுடைய கோரிக்கையை ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள். ‘குழந்தை திருமணம் நீண்டகாலமாக நடை முறையில் இருக்கிறது. அதை சட்டென்று நிறுத்தமுடியாது’ என்றார்கள். இன்றைய காலகட்டத்திற்கு சாத்தியமில்லாதது என்பதை புரியவைத்தேன்’’ என்கிறார்.

விஜயலட்சுமியின் தாய் கமலா, ‘‘என் மகளுக்கு 13 வயதில் திருமணம் செய்து வைத்திருந்தால் நிச்சயம் அவள் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்திருக்காது. அவள் இந்த நிலைக்கு உயர்ந்திருப்பதை பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது’’ என்கிறார்.

மேலும் செய்திகள்