கர்நாடகத்திற்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லையா? தினேஷ் குண்டுராவுக்கு எடியூரப்பா பதில்

கர்நாடகத்திற்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை என்று தினேஷ் குண்டுராவ் கூறிய குற்றச்சாட்டுக்கு எடியூரப்பா பதிலளித்து உள்ளார்.

Update: 2018-02-03 21:30 GMT
பெங்களூரு,

கர்நாடகத்திற்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை என்று தினேஷ் குண்டுராவ் கூறிய குற்றச்சாட்டுக்கு எடியூரப்பா பதிலளித்து உள்ளார்.

கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

ரூ.1¼ லட்சம் கோடி

காங்கிரஸ் மீண்டும் ஒரு முறை தனது உண்மை முகத்தை வெளிப்படுத்தி உள்ளது. மத்திய அரசு கர்நாடகத்திற்கு அதிகளவில் நிதி ஒதுக்கியுள்ளது. ஆயினும் உண்மை தகவல்களை மூடிமறைத்து காங்கிரஸ் செயல் தலைவர் தினேஷ் குண்டுராவ் புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளார். மத்திய அரசு போதிய நிதியை கர்நாடகத்திற்கு ஒதுக்கவில்லை என்று அவர் சொல்கிறார். இது கண்டிக்கத்தக்கது ஆகும்.

மத்தியில் பா.ஜனதா அரசு அமைந்த பிறகு 14-வது நிதி ஆணையத்தில் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிதி உதவி 32 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதன் மூலம் கர்நாடகத்திற்கு ரூ.1¼ லட்சம் கோடி கூடுதலாக கிடைக்கிறது. இதனால் கர்நாடகத்திற்கு கடந்த 3 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்து 35 ஆயிரம் கோடி நிதி கிடைத்துள்ளது. இதற்கு கர்நாடக அரசு இன்னும் கணக்கு கொடுக்கவில்லை. 14-வது நிதி ஆணையம் மொத்த 5 ஆண்டு காலத்திற்கும் சேர்த்து கர்நாடகத்திற்கு ரூ.2 லட்சத்து 3 ஆயிரத்து 445 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மக்கள்தொகை அடிப்படையில்...

அத்துடன் மத்திய அரசின் திட்டங்களுக்கு வழங்கப்படும் நிதியை சேர்த்து மொத்தம் மத்திய அரசு ரூ.3 லட்சம் கோடி நிதி உதவி வழங்குகிறது. கர்நாடகத்திற்கு இன்னும் வரவேண்டிய ரூ.10 ஆயிரம் கோடி நிதி மத்திய அரசிடம் பாக்கி உள்ளதாக காங்கிரஸ் சொல்கிறது. ஏற்கனவே திட்டங்களுக்கு வழங்கப்பட்ட நிதியை முழுமையாக பயன்படுத்தி அதற்கான சான்றிதழை தாக்கல் செய்திருக்க வேண்டும். கர்நாடக அரசு இந்த சான்றிதழை தாக்கல் செய்யாமல் இருக்கலாம்.

மக்கள்தொகை அடிப்படையில் மத்திய அரசு நிதியை பகிர்ந்து அளிக்கிறது. முன்பு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கர்நாடகத்தில் இருந்து மத்திய அரசுக்கு 19 சதவீத வரி சென்றது. அதில் 4.9 சதவீத நிதி மட்டுமே கர்நாடகத்திற்கு வந்தது. இப்போது பா.ஜனதா ஆட்சி அமைந்த பிறகு நிதி பகிர்ந்து அளிப்பது 4.70 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

வார்த்தை போர்

பிரதமர் மோடி இன்று(ஞாயிற்றுக்கிழமை) பெங்களூரு வருகை தரும் நிலையில் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு குறித்து ஆளும் காங்கிரசும், பா.ஜனதாவும் வார்த்தை போரில் ஈடுபட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

மேலும் செய்திகள்