தென்னை விவசாயிகளுக்கு நிவாரண நிதி வழங்கக்கோரி அரிசிகெரே தாலுகாவில் முழுஅடைப்பு

தென்னை விவசாயிகளுக்கு நிவாரண நிதி வழங்கக்கோரி நேற்று அரிசிகெரே தாலுகாவில் முழுஅடைப்பு போராட்டம் நடந்தது.

Update: 2018-02-03 22:00 GMT
ஹாசன்,

தென்னை விவசாயிகளுக்கு நிவாரண நிதி வழங்கக்கோரி நேற்று அரிசிகெரே தாலுகாவில் முழுஅடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தென்னை விவசாயிகள்

ஹாசன் மாவட்டம் அரிசிகெரே தாலுகாவில் ஏராளமான தென்னை விவசாயிகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக போதுமான தண்ணீர் இல்லாமலும், பூச்சிக்கொல்லிகள் தாக்கியும் அரிசிகெரே தாலுகாவில் உள்ள ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் நாசமடைந்தன. இதுகுறித்து விவசாயிகள் சங்கத்தினர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து தங்களுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் இதுவரையில் அதிகாரிகள், விவசாயிகளின் கோரிக்கை குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் தங்களுக்கு நிவாரண நிதி வழங்கக்கோரி அரிசிகெரே தாலுகாவில் முழுஅடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்தனர். அதற்காக பல்வேறு தரப்பினரிடமும் ஆதரவு கேட்டு அழைப்பு விடுத்தனர். இந்த முழுஅடைப்பு போராட்டம் பிப்ரவரி மாதம் 3-ந் தேதி(அதாவது நேற்று) நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு

திட்டமிட்டபடி நேற்று அரிசிகெரே தாலுகாவில் முழுஅடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் தனியார் பஸ்கள், ஆட்டோக்கள் ஓடவில்லை. ஏராளமான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. முழுஅடைப்பு போராட்டத்தையொட்டி அரிசிகெரே டவுனில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து பி.டி.சர்க்கிள் வரை ஊர்வலம் நடந்தது.

இதில் எம்.எல்.ஏ.க்கள் எச்.டி.ரேவண்ணா, சிவலிங்கேகவுடா மற்றும் ஏராளமான விவசாயிகள் சங்கத்தினர் கலந்து கொண்டனர். ஊர்வலத்தின்போது அவர்கள் தென்னை விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரண நிதி வழங்கக்கோரி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள் தங்களுடைய கோரிக்கைகள் குறித்து வேளாண்துறை அதிகாரியிடம் மனு கொடுத்தனர். இந்த முழுஅடைப்பு போராட்டத்தால் அரிசிகெரே தாலுகாவில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்