போட்டித்தேர்வில் வெற்றி பெறுவது தான் உங்கள் இலக்காக இருக்க வேண்டும் கலெக்டர் பேச்சு

போட்டித் தேர்வில் வெற்றி பெறுவது தான் உங்கள் இலக்காக இருக்க வேண்டும் என்று இலவச பயிற்சி வகுப்பினை தொடங்கி வைத்து கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி பேசினார்.

Update: 2018-02-03 22:45 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை தியாகி அண்ணாமலை பிள்ளை மேல்நிலை பள்ளி வளாகத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலக கூட்ட அரங்கில் நேற்று மாவட்ட வேலைவாய்ப்புத் துறை சார்பாக காவலர் மற்றும் குரூப்-4 போட்டித் தேர்வுகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் இலவச பயிற்சி வகுப்பு தொடக்க விழா நடைபெற்றது. மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் விஜயா தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி பயிற்சி வகுப்பினை தொடங்கி வைத்து பேசியதாவது:-

போட்டித் தேர்வுக்கு நீங்கள் தயாராக செல்வதற்காக இந்த பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. பல்வேறு நிலைகளில் உள்ள அரசு பணியிடங்களை நிரப்புவதற்காக போட்டித்தேர்வு நடத்தப்படுகிறது. இதில் கலந்து கொள்பவர்கள் உங்கள் அருகில் இருப்பவர்கள் மட்டும் இருக்க மாட்டார்கள், தமிழ்நாடு முழுவதும் இருந்து கலந்து கொள்வார்கள். நீங்கள் கஷ்டப்பட்டு படிக்க வேண்டும். அப்போது தான் ஆயிரத்தில் ஒருவராக போட்டித் தேர்வில் நீங்கள் வெற்ற பெற முடியும்.

போட்டித் தேர்வில் பங்கு கொள்வது உங்கள் இலக்கு அல்ல, அதில் வெற்றி பெறுவது தான் உங்கள் இலக்காக இருக்க வேண்டும். போட்டித் தேர்வில் வெற்றி பெற்று நீங்கள் செய்யும் ஒவ்வொரு பணியும் சமுதாயத்திற்கானது. புத்தகத்தை கையில் வைத்து படிப்பது முக்கியம் இல்லை, படிப்பதை மனதிற்குள் எடுத்துக் கொள்வது தான் முக்கியம்.

இன்றைய கால கட்டத்தில் படிக்கும் போது நிறைய இடையூறுகள் இருக்கும். தினமும் 3 அல்லது 4 மணி நேரம் படிப்பதே கடினமாக உள்ளது.

இதையெல்லாம் கடந்து வந்து படித்தால் தான் வெற்றி பெற முடியும். இன்றைய கால கட்டத்தில் ஒரு போட்டித் தேர்வுக்காக மட்டும் நீங்கள் படிப்பது இல்லை. அனைத்து தேர்வுகளுக்கும் உங்களை தயார் செய்து வருகிறீர்கள். போட்டித் தேர்விற்கு படிக்கும் போது கருத்துகளை உள்வாங்கி படிக்க வேண்டும். அப்போது தான் எப்படி கேள்வி கேட்டாலும் உங்களால் பதில் அளிக்க முடியும். போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டால் மட்டும் போதாது. அதன் பின் நடைபெறும் நேர்முக தேர்வில் கடுமையான போட்டி இருக்கும். உங்கள் வாழ்கைக்கு அச்சாரம் போட்டித் தேர்வு. இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக போட்டித் தேர்விற்கான கருத்துரைகள் ‘தேர்வை எதிர் கொள்வது எப்படி’ என்ற தலைப்பில் துணை போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) பார்த்திபன், ‘வெற்றி நிச்சயம்’ என்ற தலைப்பில் விழுப்புரம் வணிக வரித்துறை துணை ஆணையர் மணிமொழியன், ‘தேர்வின் நேரத்தினை கையாளும் முறை’ என்ற தலைப்பில் தும்பக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியர் அரிகிருஷ்ணன் ஆகியோர் பேசினர். 

மேலும் செய்திகள்