திசையன்விளை அருகே மின்கம்பத்தில் மோதி கார் கவிழ்ந்தது; பாலிடெக்னிக் மாணவர் பரிதாப சாவு

திசையன்விளை அருகே மின்கம்பத்தில் கார் மோதி கவிழ்ந்ததில் பாலிடெக்னிக் மாணவர் பலியானார். டிரைவர் உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர்.;

Update: 2018-02-03 20:45 GMT
திசையன்விளை,

திசையன்விளை அருகே மின்கம்பத்தில் கார் மோதி கவிழ்ந்ததில் பாலிடெக்னிக் மாணவர் பலியானார். டிரைவர் உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-

ஆலய திருவிழா

நெல்லை மாவட்டம் இடிந்தகரையைச் சேர்ந்தவர்கள் ஒரு காரில் திசையன்விளை அருகே உள்ள உவரி அந்தோணியார் ஆலய திருவிழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று மாலையில் புறப்பட்டு வந்தனர். காரில் டிரைவரையும் சேர்த்து மொத்தம் 9 பேர் இருந்தனர்.

அவர்கள் வந்த கார் திசையன்விளை அருகே உள்ள காரிகோவில் விலக்கு பகுதியில் வந்து கொண்டு இருந்தது. அப்போது, எதிரே ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது. அந்த மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருப்பதற்காக காரை டிரைவர் திருப்பினார். டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தின் மீது மோதி கவிழ்ந்தது.

மாணவர் பலி

இதில் காரில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி சத்தம் போட்டனர். அவர்களின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். உவரி போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காருக்குள் சிக்கியவர்களை மீட்டனர். இதில் 8 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டனர். ஒருவர் மட்டும் பிணமாக மீட்கப்பட்டார். காயம் அடைந்த 4 பேர் திசையன்விளையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியிலும், மற்ற 4 பேர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து உவரி போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் விபத்தில் பலியானவர் இடிந்தகரையைச் சேர்ந்த ராஜ் மகன் அன்டன் (வயது 20) என்பதும், பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் என்பதும் தெரியவந்தது. காயம் அடைந்தவர்களில் ஒருவரது பெயர் அபிஷேக் என்பதும், காரை ஓட்டியவர் கார்மேகம் என்பதும் தெரியவந்தது. மற்றவர்களின் பெயர்கள் உடனடியாக தெரியவில்லை. இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்