விழுப்புரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம், போலீசார் நடவடிக்கை

விழுப்புரம் நகரில் சாலையோர ஆக்கிரமிப்புகளை போலீசார் அகற்றினார்கள்.

Update: 2018-02-03 21:45 GMT
விழுப்புரம்,

விழுப்புரம் நகரில் உள்ள சாலையோரங்களில் நடைபாதை வியாபாரிகள் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் வைத்துள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும் மீண்டும், மீண்டும் ஆக்கிரமிப்புகள் உருவாகாமல் இருக்க நகராட்சி நிர்வாகமும், காவல்துறையினரும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

இருப்பினும் நடைபாதை வியாபாரிகள் தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை விழுப்புரம் எம்.ஜி.சாலை, பாகர்ஷா வீதியில் நடைபாதையில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டு இருந்த கடைகளை மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் தலைமையிலான போலீசார் அதிரடியாக அகற்றினார்கள்.

தொடர்ந்து, அதே பகுதியில் சில காய்கறி கடைகள், பழக்கடைகளின் வியாபாரிகள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடைபாதைகளை ஆக்கிரமிப்பு செய்து வியாபாரம் செய்துகொண்டிருந்தனர். அந்த ஆக்கிரமிப்புகளையும் போலீசார் அகற்றினார்கள்.

ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதற்கு பிறகு எம்.ஜி. சாலை, பாகர்ஷா வீதிகள் விசாலமாக காட்சியளித்தது. இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடர்ந்து நடைபெறும். மீண்டும், மீண்டும் யாரேனும் போக்குவரத்துக்கு இடையூறாக ஆக்கிரமிப்பு செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்தனர். 

மேலும் செய்திகள்