நண்பர்களுடன் குளிக்க சென்ற போது பழனி இடும்பன் குளத்தில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் பலி

நண்பர்களுடன் பழனி இடும்பன் குளத்தில் குளிக்க சென்றபோது தண்ணீரில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் பலியானார்கள்.

Update: 2018-02-03 22:15 GMT
பழனி,

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே உள்ள தொப்பம்பட்டியை சேர்ந்தவர் குமார். இவருடைய மகன்கள் யுகேஸ் (வயது 10), தினேஷ் (6). குமார் தனது குடும்பத்துடன் திருப்பூரில் தங்கி கூலிவேலை பார்த்து வருகிறார். யுகேஸ் அங்குள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் தைப்பூச திருவிழாவுக்காக பழனி குரும்பபட்டியில் உள்ள உறவினரான அழகிரிநாதன் என்பவரின் வீட்டுக்கு அண்ணனும், தம்பியும் வந்தனர்.

இந்த நிலையில் நேற்று யுகேஸ், தினேஷ், அழகிரிநாதனின் மகனும், பள்ளி மாணவனுமான செல்வமணி (10) மற்றும் அவரின் நண்பர்கள் 2 பேருடன் பழனி இடும்பன்குளத்தில் குளிக்க சென்றனர். அப்போது, குளத்தின் ஒரு பகுதியில் குளித்துக்கொண்டிருந்த பக்தர்கள் சிறுவர்களை தண்ணீரில் இறங்க அனுமதிக்கவில்லை என தெரிகிறது.

இதையடுத்து பக்தர்கள் பார்க்காத நேரத்தில் யுகேசும், செல்வமணியும் குளத்தில் இறங்கி குளிக்க தொடங்கினர். அப்போது அவர்கள் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் கரைக்கு திரும்ப அவர்கள் முயன்றபோது, எதிர்பாராதவிதமாக தண்ணீருக்குள் மூழ்க தொடங்கினர். இதை கரையில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த தினேஷ், ‘காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்’ என அலறி கூச்சல் போட்டான்.

அவனின் அலறல் சத்தம் கேட்ட பக்தர்கள் இருவரையும் மீட்க முயன்றனர். ஆனால் அதற்குள் இருவரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். இதையடுத்து அவர்களின் உடல்களை பக்தர்கள் மீட்டனர். இதற்கிடையே சம்பவம் குறித்து தகவலறிந்த பழனி நகர் போலீசார் விரைந்து சென்று பிணங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தைப்பூச திருவிழாவின் நிறைவு நாளில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. 

மேலும் செய்திகள்