ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளி வாலிபர் கொலை பிச்சை கொடுக்காததால் திருநங்கைகள் ஆத்திரம்

ஊத்தங்கரை அருகே பிச்சை தராததால் ஆத்திரத்தில் ஓடும் ரெயிலில் இருந்து வாலிபரை கீழே தள்ளி விட்டு திருநங்கைகள் கொலை செய்தனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

Update: 2018-02-03 23:15 GMT
கிருஷ்ணகிரி,

ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகில் உள்ள ஜி.பட்டவாடா கிராமத்தைச் சேர்ந்தவர் சாமிதுரா. இவரது மகன் கலும் சத்ய நாராயணா (வயது 30). அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் காரம் வீரபாபு (20), பாப்பண்ணா துரா (20), கலும் சாமி துரா (23). இவர்கள் 4 பேரும் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்வதற்காக ரெயிலில் வந்து கொண்டிருந்தனர்.

ஜாம்ஷெட்பூரில் இருந்து ஆலப்புழா செல்லும் பொகாரோ எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்று அவர்கள் 4 பேரும் பயணம் செய்து கொண்டிருந்தனர். அந்த ரெயில் நேற்று காலை கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள சாமல்பட்டி ரெயில் நிலையம் வந்தது. அங்கு சில நிமிடங்கள் ரெயில் நின்று விட்டு புறப்பட்டது. அப்போது ரெயிலின் கதவு அருகில் கலும் சத்ய நாராயணாவும், காரம் வீரபாபுவும் நின்று கொண்டிருந்தனர்.

அந்த நேரம் திருநங்கைகள் சிலர் வந்து அவர்களிடம் பிச்சை கேட்டனர். அப்போது கலும் சத்ய நாராயணா தன்னிடம் காசு இல்லை என்று கூறினார். இதில் ஆத்திரம் அடைந்த திருநங்கைகள் கலும் சத்ய நாராயணாவை கையால் தலையில் தாக்கி, ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளி விட்டனர்.

இதில் அவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். அவரை காப்பாற்றுவதற்காக முயன்ற காரம் வீரபாபுவும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். கண்இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தை பார்த்த ரெயில் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உடனடியாக ரெயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினார்கள். ரெயில் நின்றதும், உள்ளே பெட்டியில் இருந்த திருநங்கைகள் கீழே இறங்கி ஓட்டம் பிடித்தனர்.

இது குறித்து பயணிகள் ஊத்தங்கரை மற்றும் சாமல்பட்டி ரெயில் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ரெயில்வே போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் இறந்த கலும் சத்ய நாராயணாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் படுகாயம் அடைந்த காரம் வீரபாபுவை மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது.இது குறித்து தகவல் அறிந்ததும் சேலம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி சாமல்பட்டிக்கு விரைந்து வந்து கொலை நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். 

மேலும் செய்திகள்