பேரையூர் அருகே தீண்டாமை சுவரை அகற்ற வலியுறுத்தி தொடர் போராட்டம்

பேரையூர் அருகே தீண்டாமை சுவரை அகற்றக்கோரி ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.;

Update: 2018-02-03 23:15 GMT
பேரையூர்,

பேரையூர் அருகே உள்ளது சந்தையூர் கிராமம். இங்குள்ள இந்திரா காலனியில் இரு சமூகத்தினர் வசித்து வருகின்றனர். அதில் ஒரு சமூகத்தினர் வசிக்கும் பகுதியில் சுற்றுச்சுவர் உள்ளதாகவும், அந்த சுவர் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதாகவும் அதை அகற்ற வேண்டும் என்று தொடர்ந்து மற்றொரு சமூகத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் சுற்றுச்சுவர் அகற்றப்படாததை கண்டித்து கடந்த 29-ந்தேதியில் இருந்து அரசு கவனத்தை ஈர்க்கும் வகையில் பட்டினி போராட்டம், மலைப்பகுதியில் குடியிருப்பு, கண்களை கட்டி என்று பல்வேறு கட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

நேற்று மண்டையோடு, எலும்புகள் ஆகியவற்றை வாயில் கவ்வியவாறு தங்கள் போராட்டத்தை நடத்தினர். மேலும் இவர்கள் மலைப்பகுதியிலேயே குடியிருந்து உணவு சமைத்து, அங்கேயே தங்கி தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். மேலும் 1 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்லாமல் புறக்கணிப்பு செய்து, தங்கள் பெற்றோர், உறவினர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மலைப்பகுதியில் குடியிருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் ஒருசிலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளவர்களின் நலன்கருதி 108 ஆம்புலன்சுடன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இதுகுறித்து போராட்டக் குழுவினர் கூறியதாவது:-

இந்திரா காலனியில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள சுவரை அகற்றும்வரை அமைதியான முறையில் போராட்டம் தொடரும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

மேலும் செய்திகள்