தீப்பெட்டிக்கு ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

தீப்பெட்டிக்கு ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும் என்று தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2018-02-03 20:45 GMT
கோவில்பட்டி,

தீப்பெட்டிக்கு ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும் என்று தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

18 சதவீத வரி விதிப்பு

கோவில்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகள் உள்ளன. இதன்மூலம் சுமார் 2 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். கடந்த ஆண்டு ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு சேவை வரி விதிக்கப்படுவதற்கு முன்பாக, தீப்பெட்டிக்கு 6 சதவீத மத்திய கலால் வரி மட்டுமே விதிக்கப்பட்டது.ஆனால் தற்போது தீப்பெட்டிக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுகிறது. மேலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால், தீப்பெட்டி உற்பத்திக்கு தேவையான பொட்டாசியம் குளோரைடு, பாஸ்பரஸ், மெழுகு, அட்டை போன்ற மூலப்பொருட்களின் விலையும் உயர்ந்து உள்ளது. இதனால் ஒரு பண்டல் தீப்பெட்டி உற்பத்திக்கு செலவு ரூ.50 வரையிலும் அதிகரித்து உள்ளது.

வரியை குறைக்க கோரிக்கை

மேலும் வெளிநாடுகளுக்கு தீப்பெட்டி ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு முன்பு 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கியது. ஆனால் தற்போது அதனை 2 சதவீதமாக குறைத்து விட்டது. இதனால் தீப்பெட்டி உற்பத்தி தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. தற்போது தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வும் வழங்கப்பட்டு உள்ளது. தீப்பெட்டி உற்பத்தியில் 90 சதவீதம் பெண்களே ஈடுபட்டு உள்ளனர்.எனவே புதுடெல்லியில் வருகிற 10-ந்தேதி நடைபெற உள்ள ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் தீப்பெட்டிக்கு 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக வரியை குறைக்க வேண்டும் என்று தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்