கோவை உக்கடம் பஸ் நிலையம் அருகே ‘பிரேக்’ பிடிக்காத அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதி வாலிபர் பலி

உக்கடம் பஸ் நிலையம் அருகே பிரேக் பிடிக்காத அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ஒரு வாலிபர் பரிதாபமாக இறந்தார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.

Update: 2018-02-03 22:45 GMT
கோவை,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சீனிவாசபுரத்தை சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மகன் சதீஷ்குமார்(வயது 23). கோவையில் ஏ.சி. மெக்கானிக்காக வேலைபார்த்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் ஹரிபிரசாத்(24). இவர் கோவையில் தபால் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இருவரும் தினமும் பொள்ளாச்சியிலிருந்து பஸ் மூலம் கோவை உக்கடம் வருவார்கள். உக்கடம் பஸ் நிலையம் முன்பு தனியார் வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தியிருக்கும் தங்கள் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு வேலைக்கு செல்வார்கள். அதன்படி நேற்றுக்காலை 10 மணியளவில் இருவரும் பஸ் மூலம் பொள்ளாச்சியிலிருந்து கோவை வந்தனர். உக்கடம் பஸ் நிலையம் முன்பு உள்ள வாகன நிறுத்துமிடத்திலிருந்து மோட்டார்சைக்கிளை எடுத்துக் கொண்டு அவர்கள் புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை சதீஷ்குமார் ஓட்டினார். ஹரிபிரசாத் பின்னால் உட்கார்ந்திருந்தார். அவர்கள் உக்கடம் சிக்னல் அருகே வந்த போது பஸ் நிலையத்திலிருந்து வந்த அரசு டவுன் பஸ் திடீரென்று அவர்கள் மீது மோதியது.

இதில் 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். உடனே அவர்களை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே சதீஷ்குமார் பரிதாபமாக இறந்தார்.

பலத்த காயம் அடைந்த ஹரிபிரசாத்தை சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் சிக்கிய பஸ் நடுரோட்டில் நின்றதால் அந்த பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொதுமக்கள் மற்றும் போலீசார் பஸ்சை தள்ளி ஓரமாக நிறுத்தினார்கள். பஸ் பிரேக் பிடிக்காததால் இந்த விபத்து ஏற்பட்டதாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

இந்த விபத்து குறித்து கோவை மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் செல்வ ராஜை கைது செய்தனர். 

மேலும் செய்திகள்