அழகான கேத்தரீன் நீர் வீழ்ச்சியில் ஆபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கோத்தகிரி அருகே உள்ள அழகான கேத்தரீன் நீர்வீழ்ச்சியில் ஆபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று பொதுமக்களிடம் எதிர்பார்ப்பு உள்ளது.

Update: 2018-02-03 22:30 GMT
கோத்தகிரி,

கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் அரவேனு கிராமத்தில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது அழகான கேத்தரீன் நீர்வீழ்ச்சி. நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் கேத்தரீன் நீர்வீழ்ச்சி அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கோடை சீசன் மட்டுமின்றி சாதாரண நாட்களில் கூட இந்த நீர்வீழ்ச்சியை காண சுற்றுலா பயணிகளுடன் உள்ளூர் மக்களும் அதிகளவில் வந்து செல்கின்றனர்.

சேலம் மாவட்ட கலெக்டராக 1820-ம் ஆண்டு முதல் 1829-ஆம் ஆண்டு வரை பணியாற்றிய கோபர்ன் தனது பணிகாலம் முடிந்த பிறகு கோத்தகிரி பகுதிக்கு வந்து குடியேறி உள்ளார். முதன் முதலில் 1843-ஆம் ஆண்டு கணுவட்டி கிராமத்தில் முதல் காபி நிறுவனத்தை ஆரம்பித்து வைத்தார். இவருடைய மனைவி கேத்தரீன் 1879-ம் ஆண்டு ஆகஸ்டு 30-ம் தேதி இறந்தார். தனது மனைவியின் நினைவாக அவர் இந்த பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு கேத்தரீன் என்று பெயரை சூட்டினார். அது முதல் கேத்தரீன் நீர்வீழ்ச்சி என்று அழைக்கப்பட்டு வருகிறது.

139 ஆண்டுகள் பழமை வாய்ந்த கேத்தரின் நீர்வீழ்ச்சியை காணவரும் சுற்றுலா பயணிகளில் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து செல்பி மோகத்தார் தவறி விழுந்து இறந்துள்ளனர். அருவிக்கு வரும் நீர் தேங்கியுள்ள இடங்களில் குளிக்கும்போது ஆழமுள்ள பகுதியிலும் மூழ்கி இறக்கும் சம்பவமும் தொடர் கதையாகி வருகிறது.

250 அடி உயரத்தில் இருந்து கீழே கொட்டும் கேத்தரின் அருவியை காண செல்பவர்கள் வசதிக்காக அமைக்கப்பட்ட நீர்வீழ்ச்சி காட்சிமுனை கோபுரம் பராமரிப்பின்றி உள்ளது. மேலும் அங்குள்ள கழிப்பறை முழுவதும் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து காட்சியளிக்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

மேலும் அருவியை கண்டு களிக்கும் இடத்தில் அமைக்கப்பட்டு இருந்த பாதுகாப்பு இரும்பு குழாய்கள் பழுதடைந்து தற்போது குழாய்கள் ஏதுமின்றி பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. பார்வையாளர்கள் உயரமான இடத்தில் அமைந்துள்ள பாறைகளின் விளிம்பிற்கு சென்று அருவியை கண்டு களிப்பதுடன் முகப்பில் நின்று புகைப்படம் எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். தவறி விழுந்தால் உயிரிழப்பு ஏற்படும் என்ற விபரீதத்தை யாரும் உணருவதில்லை.

கேத்தரின் நீர்வீழ்ச்சியை காட்சி முனையில் இருந்து முழுவதுமாக காண முடியாததாலும் அருவியில் குளிக்க முடிவது இல்லை. இதனால் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவிற்கு தேயிலை தோட்டங்கள் வழியாக நடந்து சென்று மெயின் அருவிக்கு மேல் பகுதியில் அமைந்துள்ள தூரி பாலம் அருகே உள்ள சிறிய அருவிகளை கண்டு ரசிக்கிறார்கள். அங்கு தேங்கியுள்ள ஆபத்தான மிகவும் ஆழமுள்ள சுழல்கள் நிறைந்துள்ள அருவி தடாகங்கள் அருகே நின்ற ‘செல்பி’ புகைப்படம் எடுக்க முயற்சி செய்வதுடன் அருவி நீரில் பாதுகாப்பின்றி குளித்து வருகின்றனர்.

பாசி படர்ந்த பாறைகளில் குளிக்கும் போது வழுக்கி சுழல்களில் சிக்கி இறப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் இந்த பகுதியில் மூழ்கி பரிதாபமாக இறந்துள்ளனர். கடந்த ஆண்டு சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவன் விக்னேஷ் (வயது 20), மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (22) ஆகியோர் அருவி நீரில் மூழ்கி இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆபத்தான பகுதிக்கு செல்லும் வழியில் காவல் துறை சார்பில் ஒரே ஒரு எச்சரிக்கை பலகை மட்டுமே வைக்கப்பட்டுள்ளது.

இந்த அருவி தடாகத்தில் சிக்கி உயிரிழப்பவர்களது உடல்களை மீட்பதில் தீயணைப்பு துறையினருக்கும் போலீசாருக்கும் பெரும் சவாலாக உள்ளது. இப்பகுதியில் புதர் சூழ்ந்து பயனற்று காணப்படும் தூரி பாலத்தையும் சிற்றருவியையும் காண செல்லும் இளைஞர்கள் பலர் இங்குள்ள ஆபத்தை அறியாமல் உயிரிழந்து வருவது இப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.

ஆகவே வனத்துறை மற்றும் குஞ்சப்பனை ஊராட்சிக்கு உட்பட்ட கேத்தரின் நீர்வீழ்ச்சி அழகாக இருந்தாலும், அதில் அடிக்கடி ஏற்படும் ஆபத்தை தடுக்க, அங்குள்ள காட்சிமுனை கோபுர பகுதியில் புதியதாக பாதுகாப்பு இரும்பு குழாய் தடுப்புகளை அமைக்க வேண்டும். ஆபத்தான தூரிபாலம் பகுதியில் அருவிக்கு அருகில் சென்று புகைப்படம் எடுக்கவும், குளிக்கவும் தடை விதிக்க வேண்டும். மேலும், அங்கு எச்சரிக்கை பலகைகள் வைப்பதுடன் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

ஆட்களை பணியமர்த்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினால் மட்டுமே உயிரிழப்புகள் நிகழாமல் தடுக்கப்படும் என்று அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர். 

மேலும் செய்திகள்