தூத்துக்குடியில் அண்ணா நினைவுநாள் அனுசரிப்பு

தூத்துக்குடியில் அரசியல் கட்சிகள் சார்பில் அண்ணா நினைவுநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.

Update: 2018-02-03 21:00 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடியில் அரசியல் கட்சிகள் சார்பில் அண்ணா நினைவுநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.

தி.மு.க.

பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் முன்பு வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க.வினர் அமைதி பேரணி புறப்பட்டனர். அவர்கள் தூத்துக்குடி காய்கனி மார்க்கெட் அருகே உள்ள அண்ணா சிலை வரை பேரணியாக சென்று, அங்கு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அண்ணா நினைவுநாளையொட்டி தூத்துக்குடி சிவன் கோவிலில் சமபந்தி விருந்து நடந்தது. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரோசாலி சுமதா தலைமை தாங்கினார். நிர்வாக அதிகாரி அஜித் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கீதாஜீவன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். இதில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க.

தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால் தலைமையில் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி அ.தி.மு.க. (அம்மா) அணி சார்பில் கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்து, அங்குள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர்கள் சுந்தர்ராஜ் (வடக்கு), ஹென்றி தாமஸ் (தெற்கு) ஆகியோர் தலைமை தாங்கினர். மகளிர் அணி இணை செயலாளர் உமா மகேசுவரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ம.தி.மு.க.

தூத்துக்குடி மாவட்ட ம.தி.மு.க. சார்பில் தூத்துக்குடி காய்கனி மார்க்கெட் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் வீரபாண்டி செல்லச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி எம்.ஜி.ஆர். கழகம் சார்பில் பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். கழக மாவட்ட செயலாளர் அழகிரிசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அண்ணா நினைவு நாளை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. மதியம் கந்தசஷ்டி மண்டபத்தில் பொது விருந்து நடந்தது. திருச்செந்தூர் உதவி கலெக்டர் தங்கவேலு ஏழைகளுக்கு இலவச வேட்டி, சேலைகளை வழங்கினார். உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் செந்தூர்ராஜன், கோவில் இணை ஆணையர் பாரதி, கோவில் மக்கள் தொடர்பு அலுவலர் மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்