பெண்ணை கொன்று நகை- பணத்தை கொள்ளையடித்த 3 பேர் பூடான் நாட்டின் எல்லையில் கைது

அன்னூர் அருகே தோட்டத்தில் வசித்து வந்த பெண்ணை கொன்று நகை-பணத்தை கொள்ளையடித்த வடமாநிலத்தை சேர்ந்த 3 பேரை பூடான் நாட்டின் எல்லையில் போலீசார் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

Update: 2018-02-02 23:30 GMT
கோவை,

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கணுவக்கரை ஊஞ்சக்குட்டை பகுதியை சேர்ந்தவர் மயில்சாமி (வயது 58), விவசாயி. இவருடைய மனைவி ராஜாமணி (48). இவர்களுடைய மூத்த மகள் சுகன்யா, கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இளைய மகள் ஜனனி கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். இதன் காரணமாக மயில்சாமி, ராஜாமணி ஆகியோர் ஊஞ்சக்குட்டையில் உள்ள தனது தோட்டத்தில் தனியாக வசித்து வந்தனர்.

இங்கு மயில்சாமி புதிதாக வீடு கட்டி வருகிறார். அந்த வீட்டில் டைல்ஸ், கிரானைட் கற்கள் பதிக்கும் பணியில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த சாம்ராட் (29), பிந்து (20), அஜய் (25) ஆகிய 3 தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இதற்காக அவர்கள் 3 பேரும் தோட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் தங்கி இருந்தனர்.

இந்த நிலையில் கடந்த மாதம் 25-ந் தேதி நள்ளிரவில் அவர்கள் 3 பேரும் மயில்சாமி வீட்டின் கதவை தட்டினார்கள். உடனே மயில்சாமி கதவை திறந்ததும், குடிக்க தண்ணீர் வேண்டும் என்று கேட்டனர். அவர்கள் தங்கள் வீட்டில் வேலை செய்து வரும் நபர்கள்தானே என்று நினைத்து, மயில்சாமி கதவை திறந்து வைத்துவிட்டு உள்ளே தண்ணீர் எடுக்க சென்றார்.

அப்போது அவருக்கு தெரியாமல் பின்தொடர்ந்து சென்ற அவர்கள் 3 பேரும் திடீரென்று மயில்சாமியின் தலையின் பின்பகுதியில் கட்டையால் தாக்கியதுடன், மின்சாரத்தை அவர் மீது பாய்ச்சி கொல்ல முயன்றனர். சத்தம் கேட்டு வந்த ராஜாமணியையும் அவர்கள் கட்டையால் தாக்கி, கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்த னர். பின்னர் அவர் அணிந்து இருந்த 8 பவுன் நகை மற்றும் வீட்டில் இருந்த ரூ.1 லட்சம் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு, அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அத்துடன் தப்பிச்சென்ற அவர்கள் 3 பேரையும் பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது. தனிப்படையினர் விசாரணை நடத்தியதில் அவர்கள் 3 பேரும் மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்ததுடன், அவர்களின் புகைப்படங்களும் போலீசாருக்கு கிடைத்தது.

அதை போலீசார் வெளியிட்டு அவர்களின் செல்போன் எண்களை வைத்து எங்கு தலைமறைவாக இருக்கிறார்கள் என்பது குறித்து ஆய்வு செய்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர்கள் 3 பேரும் ஆந்திராவில் இருப்பதாக செல்போன் சிக்னல் காட்டியது. இதையடுத்து தனிப்படையினர் ஆந்திரா விரைந்தனர். ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் அவர்கள் 3 பேரும் பூடான் நாட்டின் எல்லையில் இருப்பதாக அவர்களின் செல்போன் சிக்னல் காட்டியது. இதையடுத்து தனிப்படை போலீசார் மேற்கு வங்காளம் விரைந்தனர். பின்னர் அங்குள்ள போலீஸ் உயர் அதிகாரிகளை சந்தித்து, அவர்கள் 3 பேரின் புகைப்படத்தை காட்டி, செல்போன் சிக்னல் குறித்த தகவலையும் தெரிவித்தனர்.

இதையடுத்து மேற்கு வங்காள போலீசார் உதவியுடன் தனிப்படை போலீசார் பூடான் எல்லைக்கு விரைந்தனர். அங்குள்ள கைபல்புரி மாவட்டம், சில்குரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருந்த பிந்து, அஜய், சாம்ராட் ஆகிய 3 பேரையும் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்தனர். உடனே அவர்கள் போலீசாரிடம் சரணடைந்ததை தொடர்ந்து, அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறும்போது, ‘பூடான் நாட்டின் எல்லையில் கைதான 3 பேரும் சென்னைக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து கோவைக்கு விமானம் மூலம் அழைத்து வரப்படுகிறார்கள். அதன் பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்படுவார்கள். பின்னர் அவர்கள் 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளோம்’ என்றனர். 

மேலும் செய்திகள்