தடயவியல் நிபுணர்களின் பங்கு மிகவும் முக்கியம் டி.ஜி.பி. சுனில் குமார் கவுதம் பேச்சு

குற்றங்களில் தொடர்புடையவர்களை கண்டுபிடிப்பதில் தடயவியல் நிபுணர்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகும் என டி.ஜி.பி. சுனில் குமார் கவுதம் கூறினார்.;

Update: 2018-02-01 22:45 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் தடயவியல் மற்றும் நச்சுயியல் துறை, இந்திய தடயவியல் மருத்துவ கழகம் ஆகியவை சார்பில் 39-வது வருடாந்திர தேசிய மாநாடு நேற்று தொடங்கியது.

தடயவியல் மற்றும் நச்சுயியல் மருத்துவத்தின் தற்போதைய முறைகள், மேம்பாடு என்ற தலைப்பில் நடைபெற்று வரும் இந்த மாநாட்டிற்கு போலீஸ் டி.ஜி.பி. சுனில் குமார் கவுதம் தலைமை தாங்கி மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். இதில் மருத்துவ பேராசியர்கள், தடயவியல் நிபுணர்கள், முதுகலை மற்றும் இளங்கலை மருத்துவ மாணவர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது டி.ஜி.பி. சுனில் குமார் கவுதம்-பேசியதாவது மிகவும் முக்கியம்
புதுவை மிக அழகான, அமைதியான இடம். அரவிந்தர் ஆசிரமம், மாத்ரி மந்திர் என பல்வேறு ஆன்மிக தலங்கள் இருப்பதால் ஆன்மிக பூமியாகவும் விளங்குகிறது. குற்ற சம்பவங்களில் தடயங்களை கண்டறியவும், போலீஸ் விசாரணைக்கும் தடயவியல் நிபுணர்களின் பங்கு மிகவும் முக்கியமானதாக அமையும். விசாரணையை தொடங்குவது போலீசாக இருந்தாலும் அதனை முடித்து வைப்பது தடயவியல் நிபுணர்கள் தான். சிறு காயங்கள் கூட குற்றவாளிகள் சிக்குவதற்கு மிக முக்கியமான தடயமாக இருக்கும்.

அந்த வகையில் போலீஸ் விசாரணைக்கு தடயவியல் நிபுணர்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். தற்கொலை என முடிவு செய்யப்பட்ட வழக்குகள் கூட தடயவியல் அறிக்கையின் மூலம் கொலை வழக்குகளாக மாற்றப்பட்டுள்ளன. எனவே தடயவியல் நிபுணர்களின் ஆய்வறிக்கை முக்கியமானது. குற்றவாளிகளுக்கு கோர்ட்டில் தண்டனை பெற்று தருவதற்கும் கூட தடயவியல் நிபுணர்களின் அறிக்கை அவசியம். இவ்வாறு அவர் பேசினார்.

மாநாட்டில் இந்திய தடயவியல் மருத்துவ கழக தலைவர் டாக்டர் கல்பேஷ் ஷா, செயலாளர் டாக்டர் மது கோத்ரேக்கர், மாநாட்டு தலைவர் டாக்டர் சில்வானா தியேஸ் சேப்கோ மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த மாநாடு நாளையும் (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.

மேலும் செய்திகள்