கள்ளக்காதலனுடன் சேர்ந்து மகனை கொன்று புதைத்த தாய் உள்பட 4 பேர் கைது

பிவண்டியில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து 1 வயது மகனை கொன்று புதைத்த தாய் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2018-02-02 04:30 IST
தானே,

பிவண்டியில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து 1 வயது மகனை கொன்று புதைத்த தாய் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்காதல்

தானே மாவட்டம் பிவண்டி மான்கோலி கிராமத்தை சேர்ந்தவர் பிரேந்திரகுமார். இவரது மனைவி மம்தா (வயது20). இவர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 1 வயதில் ஆர்யன் என்ற மகன் இருந்தான்.

இந்த நிலையில் பக்கத்து வீட்டை சேர்ந்த ராகேஷ் (30) என்ற வாலிபருடன் மம்தாவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. கடந்த நவம்பர் மாதம் கணவர் மற்றும் குழந்தையை தவிக்க விட்டு விட்டு மம்தா ராகேசுடன் வீட்டை விட்டு ஓடி விட்டார். இந்த நிலையில், இருவரும் இரண்டு வாரத்திற்கு முன்னர் பிவண்டி திரும்பி அந்த பகுதியிலேயே வசித்து வந்தனர்.

சிறுவன் மாயம்


இந்த நிலையில், பிரேந்திரகுமாருடன் இருந்த சிறுவன் ஆர்யன் நேற்றுமுன்தினம் திடீரென காணாமல் போய் விட்டான். அவனை எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

மனைவியும், அவரது கள்ளக்காதலனும் தான் தன் மகனை ஏதோ செய்து விட்டனர் என சந்தேகமடைந்த பிரேந்திரகுமார், இதுகுறித்து போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் மம்தா, கள்ளக்காதலன் ராகேஷ் ஆகிய இரண்டு பேரையும் பிடித்து விசாரித்தனர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.

பிவண்டியில் பிரேந்திரகுமார் வசிக்கும் பகுதியிலேயே மீண்டும் வசிப்பதால் குழந்தை ஆர்யனால் பின்னாளில் பிரச்சினை வரும் என்று ராகேஷ் மம்தாவிடம் கூறினார். எனவே இருவரும் குழந்தையை கொலை செய்ய திட்டமிட்டனர்.

கழுத்தை நெரித்து கொலை


இந்த நிலையில் தான் நேற்றுமுன்தினம் மகனை வீட்டில் வைத்து விட்டு சிறிது நேரம் பிரேந்திரகுமார் வெளியில் சென்று உள்ளார். இதை கவனித்த மம்தா வீட்டிற்குள் புகுந்து ஆர்யனை கடத்தி கொண்டு ராகேஷின் வீட்டுக்கு சென்றார். அங்கு வைத்து பெற்ற மகன் என்று கூட பாராமல் மம்தா தனது கள்ளக்காதலன் ராகேஷ், அவரது நண்பர்கள் இரண்டு பேருடன் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் அவனது உடலை அங்குள்ள ஒரு இடத்தில் புதைத்தனர்.

இந்த தகவல் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

கைது

இதையடுத்து போலீசார் மம்தாவையும், ராகேசையும் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ராகேஷின் நண்பர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

மேலும் சிறுவன் ஆர்யன் உடல் புதைக்கப்பட்ட இடத்தை தோண்டி உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதலனுடன் சேர்ந்து பெற்ற மகனை தாயே கொன்ற இந்த கொடூர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்