பெண்ணை அவதூறாக பேசிய கியாஸ் நிறுவன அதிகாரிக்கு அடி, உதை நவநிர்மாண் சேனாவினர் ஆத்திரம்

பெண்ணை அவதூறாக பேசியதால் நவநிர்மாண் சேனா கட்சியினர் கியாஸ் நிறுவன அதிகாரியை அடித்து, உதைத்தனர்.

Update: 2018-02-01 22:45 GMT
தானே,

பெண்ணை அவதூறாக பேசியதால் நவநிர்மாண் சேனா கட்சியினர் கியாஸ் நிறுவன அதிகாரியை அடித்து, உதைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கியாஸ் இணைப்பு

தானே வர்த்தக்நகர் பகுதியை சேர்ந்த பெண் சுருதி மகாஜன். சமூக ஆர்வலரான இவர் தங்கள் பகுதியில் வசிக்கும் குடியிருப்பு வாசிகளுக்கு கியாஸ் இணைப்பு மற்றும் மீட்டர் பொருத்தும்படி வாக்ளே எஸ்டேட் பகுதியில் உள்ள சமையல் கியாஸ் நிறுவன அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார். ஆனால் நிறுவன அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததை தொடர்ந்து நேற்று மதியம் 12 மணி அளவில் சுருதி மகாஜன் மீண்டும் அலுவலகத்தில் சென்று முறையிட்டார். அப்போது அதிகாரி ஒருவர் சுருதி மகாஜனை தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது.

அடி, உதை

இதுகுறித்து அப்பெண் நவநிர்மாண் சேனா கட்சி மகளிர் அணி தலைவியிடம் தெரிவித்தார். இதன்படி கியாஸ் நிறுவன அலுவலகத்தில் நவநிர்மாண் சேனா கட்சியினர் அதிரடியாக நுழைந்து பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டியவரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

சிலர் செருப்பை கொண்டும் அவரை தாக்கினர். இது பற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அதிகாரி மற்றும் அவரை தாக்கியவரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.

போலீஸ் நிலையத்தில் சுருதி மகாஜன், கியாஸ் நிறுவன அதிகாரி தன்னை தகாத வார்த்தைகளால் திட்டியதாக புகார் அளித்தார். இதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்