அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் முதலாம் ஆண்டு கணிதத்தேர்வில் 36 சதவீத மாணவர்கள் தோல்வி
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள உறுப்பு கல்லூரிகளில் படிக்கும் முதலாம் ஆண்டு மாணவர்கள் 36 சதவீதம் பேர் கணிதத்தேர்வில் தோல்வி அடைந்து உள்ளனர்.
சென்னை,
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளாக கிண்டி என்ஜினீயரிங் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்ப கல்லூரி மற்றும் குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி. கல்லூரி ஆகிய 3 கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் இடம் கிடைப்பது சிரமம். பெரும்பாலான மாணவ, மாணவிகள் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் படிக்க விரும்புகிறார்கள்.
மாணவர்களுக்கு 200 ‘கட் ஆப்’ மதிப்பெண்கள் தேவை. இதில் 2 மதிப்பெண்கள் குறைந்தால் கூட கல்லூரிகளில் இடம் கிடைக்காது. இங்கு கல்வி கட்டணமும் குறைவு.
பயிற்சி வகுப்பு
இந்த கல்லூரிகளில் ஆங்கிலத்தில் பாடம் நடத்தப்படுவதால் தமிழ்வழியில் படித்த மாணவர்கள் சிரமப்படுகிறார்கள். இதற்காக ‘பிரிட்ஜ் கோர்ஸ்’ என்ற பயிற்சி வகுப்பை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது. ஆனால் பயிற்சி பெற்றும் பல மாணவர்கள் குறிப்பாக பள்ளிக்கல்வியை தமிழ் வழியில் படித்தவர்கள் முதலாம் ஆண்டு முதல் பருவத்தேர்வில் தேர்ச்சி பெறுவதில்லை என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே நடப்பு கல்வி ஆண்டில் நடந்த முதல் பருவத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
36 சதவீதம்
இதில் கணிதத்தேர்வில் பலர் தோல்வி அடைந்து உள்ளனர். கிண்டி என்ஜினீயரிங் கல்லூரியில் 1,158 பேர் கணிதத்தேர்வு எழுதியதில் 829 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். 329 பேர் தோல்வி அடைந்தனர். அழகப்பா தொழில்நுட்ப கல்லூரியில் 483 பேர் கணிதத்தேர்வு எழுதியதில் 257 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். 226 பேர் தேர்ச்சி பெறவில்லை.
குரோம்பேட்டை எம்.ஐ.டி. கல்லூரியில் 841 பேர் எழுதியதில் 558 பேர் தேர்ச்சி பெற்றனர். 283 பேர் தோல்வி அடைந்தனர். மொத்தத்தில் கணிதத்தேர்வில் 3 கல்லூரிகளிலும் சராசரியாக 64 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 36 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெறவில்லை.
மேற்கண்ட தகவலை அண்ணா பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.