தாம்பரம் அருகே சிட்லபாக்கத்தில் 251 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் விழா 5 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் போராட்டம்

தாம்பரம் அருகே உள்ள சிட்லபாக்கத்தில் 251 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் விழா நடந்தது.

Update: 2018-02-01 22:15 GMT
தாம்பரம், 

சென்னை தாம்பரத்தை அடுத்த சிட்லபாக்கத்தில் உள்ள பரங்கிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று காலை 251 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா தலைமை தாங்கினார்.

இதில் ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவித்தொகைகளை வழங்கினார்.

விழாவில் முன்னாள் எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. தன்சிங், முன்னாள் பேரூராட்சி தலைவர் சிட்லபாக்கம் மோகன் உள்பட ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்துகொண்டனர்.

தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் போராட்டம்

முன்னதாக இந்த விழாவுக்கு தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை முறையாக அழைக்கவில்லை என்று கூறி ஆலந்தூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வும், காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான தா.மோ.அன்பரசன் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, வரலட்சுமி மதுசூதனன், அரவிந்த் ரமேஷ் உள்பட 500-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் பரங்கிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் கருப்பு கொடிகளை ஏந்தி அமைச்சர் பெஞ்சமினுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் விழா நடைபெறும் அறைக்குள் நுழைய முயன்றனர். ஆனால் அதற்கு அனுமதி மறுத்த போலீசார், தி.மு.க.வினரை உள்ளே நுழையவிடாமல் தடுப்பு ஏற்படுத்தி தடுத்து நிறுத்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 5 தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். இதனால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பாக காணப்பட்டது.

தி.மு.க.வினரின் போராட்டம் காரணமாக விழாவுக்கு அமைச்சர் வருவது சுமார் 1½ மணி நேரத்துக்கும் மேல் தாமதமானது. இதனால் காலை 10 மணிக்கு தொடங்க இருந்த விழா காலை 11½ மணிக்கு தொடங்கியது. 

மேலும் செய்திகள்